ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அதானி சோலார் மின் உற்பத்தி நிலையத்தில் காப்பர் வயர் திருட்டு!: 2 பேர் கைது..ரூ.2.50 லட்சம் பறிமுதல்..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அதானி சோலார் மின் உற்பத்தி நிலையத்தில் காப்பர் வயரை திருடியதாக 2 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் இருந்து இரண்டரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் டிராக்டர், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். கமுதி அருகே சிங்கப்படை, தாதா குளம், இடையன்குளம், புதுக்கோட்டை, சேந்தனேந்தல் ஆகிய பகுதியில் 6,500 ஏக்கரில் அதானி சோலார் மின் திட்டம் 648 மெகாவாட் சூரியஒளி மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. 

இந்த மின் உற்பத்தி நிலையத்தில் கடந்த 16ம் தேதி ஒன்றரை லட்சம் மதிப்புள்ள 9000 மீட்டர் காப்பர் வயர் திருடுபோனது தெரியவந்தது. இது தொடர்பாக சோலார் மின் உற்பத்தி நிர்வாகம் கோவிலாங்குளம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் தொட்டியாபட்டியை சேர்ந்த செந்தூர் முருகன், வேல் முருகன் ஆகிய 2 பேரை கோவிலாங்குளம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் வேல்முருகன், ராமசந்திரன் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 2 லட்சத்து 52 ஆயிரத்து 500 ரூபாய் பணம், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories: