×

காரியாபட்டியில் அதிமுகவால் 10 ஆண்டுகளாக செயல்படாத உழவர் சந்தை

*தமிழக அரசின் அறிவிப்பால் மீண்டும் செயல்படும் என மக்கள் நம்பிக்கை

காரியாபட்டி : காரியாபட்டி யூனியன் ஆபீஸ் அருகில் உள்ள உழவர் சந்தை, அதிமுகவின் அலட்சியபோக்கால் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. உழவர் சந்தையை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்து, காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரியாபட்டி சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அதனால் காரியாபட்டி பஸ் நிலையம் பின்புறம் யூனியன் ஆபீஸ் அருகில் கடந்த 13 ஆண்டுக்கு முன்பு திமுக ஆட்சியில் உழவர் சந்தை கொண்டு வரப்பட்டது. எனவே 30க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் பொருட்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்ததால் கடந்த 10 ஆண்டுகளாக உழவர் சந்தை செயல்படாமல் உள்ளது.

மேலும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், மதுப்பிரியர்களின் திறந்தவெளி பாராகவும் மாறி வருகிறது. காரியாபட்டி பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளை ஆக்கிரமித்து காய்கறி கடைகள் வைத்திருப்பவர்களுக்கு, உழவர் சந்தைக்குள் கடைகள் கொடுத்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும், உழவர் சந்தையை தொடர்ந்து செயல்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறும்போது, கடந்த 10 ஆண்டுகால அதிமுக அலட்சிய ஆட்சியில் உழவர் சந்தையை கண்டுகொள்ளாமல் விட்டதால், பயன்பாடின்றி செயல்படாமல் உள்ளது. இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக தமிழக அரசு உழவர் சந்தைகளுக்கு உயிர் கொடுக்கப்படும் என அறிவித்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது, என்றார்.

Tags : Cariabar Exponent , KariyaPatty, Farmers Market, Tamilnadu Government
× RELATED மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா வேன்...