×

இந்திய எல்லை அருகே எஸ்-400 ஏவுகணை படைப்பிரிவு நிறுத்தம்: மீண்டும் பதற்றத்தை உருவாக்கும் சீனா

புதுடெல்லி: இந்திய எல்லை அருகே 2 எஸ்-400 ஏவுகணை படைப்பிரிவை சீனா நிறுத்தி உள்ளதால் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.  இந்தியா - சீனா எல்லையில் சமீப காலமாக அசாதாரண சூழல் நிலவுவதால், இருநாடுகள் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இருநாடும் தங்களது ராணுவத்தினரை எல்லையில் குவித்து வருகிறது. இந்நிலையில், சீன ராணுவம் தனது பலமிக்க எஸ்-400 ஏவுகணை படைப்பிரிவை லடாக் அருகே சின்ஜியாங்கில் உள்ள ஹோடன் விமானப்படை தளத்திலும், அருணாச்சல் பிரதேச எல்லையில் திபெத்தில் உள்ள நைங்கி விமான தளத்திலும் நிறுத்தி உள்ளது. இது, இந்தியாவின் விமானப்படை பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளதோடு, தேசிய பாதுகாப்பு மற்றும் எதிர் நடவடிக்கைகள் குறித்து மறுபரிசீலனை செய்யும் கட்டாயத்திற்கு தள்ளி உள்ளது.

இந்த சூழ்நிலையை சமாளிக்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதுகுறித்து முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கூறுகையில், ‘‘எஸ்-400 ஏவுகணைகளை முறியடிக்க நம்மிடம் ரபேல் விமானத்தின் நவீன ஏவுகணை தொழில்நுட்பங்கள் உள்ளன. இந்த ஆண்டு இறுதியில் ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 அமைப்புகளின் ஐந்து படைப்பிரிவுகளை இந்தியா பெறும். வடக்கில் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்பு சவாலுக்கு உள்ளாகி உள்ளது. இந்திய ராணுவத்திற்கு 42 விமானப் படைகள் இருக்க வேண்டும், ஒவ்வொன்றும் 18 விமானங்களைக் கொண்டிருக்க வேண்டும், தற்போதைய வலிமை 30 ஆக உள்ளது. மேலும் ஆறு படைப்பிரிவுகள் சேர்க்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன’’ என்றார்.

விண்வெளி வீரர்களுடன் பேசிய அதிபர் ஜின்பிங்
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக, சீனா தனியாக ‘தியாங்காங்’ என்ற விண்வெளி நிலையத்தை உருவாக்கி வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக 3 விண்வெளி வீரர்கள் சமீபத்தில் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு பணியாற்றும் வீரர்களை தொடர்பு கொண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று பேசினார். அப்போது அவர், ‘‘உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். சிறப்பாக பணியாற்றுங்கள். விண்வெளி நிலையம் அமைப்பது சீனாவின் விண்வெளி துறையின் முக்கியமான மைல்கல். உங்கள் வருகைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்’’ என்றார்.


Tags : Indian border ,China , S-400 missile deployment near Indian border: China creating renewed tension
× RELATED பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்...