×

வார்த்தையை பார்த்து யாரும் மிரள தேவையில்லை மத்தியஅரசை ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்?.....பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை: ஒன்றியம் என்ற வார்த்தையை பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரியில் உள்ளதால் தொடர்ந்து சொல்லிக் கொண்டு தான் இருப்போம் என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு திருநெல்வேலி நயினார் நாகேந்திரன் (பாஜ) பேசியதாவது: எல்லோரும் இப்போது ஒன்றிய அரசு என்று சொல்கிறார்கள். மே 2ம் தேதி முதல் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை தமிழக அரசு பயன்படுத்துவது ஏன்? எதற்காக ஒன்றிய அரசு என்று சொல்லப்படுகிறது என்று தெரியவில்லை. சொல்லில் குற்றம் இல்லை. ஆனால் பொருளில் குற்றம் இருக்கிறது. இது எந்த எண்ணத்தோடு சொல்லப்படுகிறது என்பதை முதல்வர் பதில் உரையில் விளக்க வேண்டும் என்று பேசினார்.

அவருக்கு உடனடியாக பதில் அளித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதை, ஏதோ சமூகக் குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். அப்படி சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அது உள்ளபடியே முழுக்க முழுக்கத் தவறு. சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதைதான் நாங்கள் சொல்கிறோம். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரி, ‘இந்தியா, அதாவது பாரதம் - மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்’ என்றுதான் உள்ளது. அதைதான் பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை.  ‘ஒன்றியம்’ என்பது தவறான சொல் அல்ல. ‘மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது’ என்பதுதான் அதனுடைய பொருள்.  

இன்னும் சிலர் பேரறிஞர் அண்ணா சொல்லாததை, எங்கள் தலைவர் கலைஞர் சொல்லாததை நாங்கள் சொல்லி வருவதாகக் குறிப்பிட்டு, அதை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். திமுகவினுடைய 1957ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே ‘இந்திய யூனியன்’ என்றுதான் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. 1963 ஜனவரி 25, நாடாளுமன்ற மாநிலங்களவையில், பேரறிஞர் அண்ணா பேசுகிறபோது, ‘அரசினுடைய இறைமை என்பதற்கு நாம் மேற்கொள்ளும் பொருள் என்ன? அரசியல் இறைமையானது, பொது மக்களிடம் நிலைத்துள்ளது என அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது. சட்டம் சார்ந்த இறைமையானது, கூட்டாட்சி ஒன்றியத்துக்கும், அதன் அங்கங்களுக்கும் இடையே, அதாவது மாநிலங்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளது’ என்றுதான் அண்ணா பேசினார்.

‘சமஷ்டி’ என்ற வார்த்தையை ம.பொ.சி. பயன்படுத்தி இருக்கிறார். ‘வெளியேறுக மிகுதியான அதிகாரக் குவிப்பு, வருக உண்மையான கூட்டாட்சி’ என்று மூதறிஞர் ராஜாஜி எழுதியிருக்கிறார். எனவே, ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை. அந்த ஒரு வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது. அதற்காகத்தான் அதை நாங்கள் பயன்படுத்துகிறோம், பயன்படுத்துவோம், பயன்படுத்திக் கொண்டேயிருப்போம் என்றார் முதல்வர். நயினார் நாகேந்திரன் : முதல்வரின் விளக்கத்தை ஏற்றுக் கொள்கிறேன். அதேநேரத்தில் இந்தியாவில் இருந்து பிரிந்ததுதான் மாநிலங்கள். இந்தியாவுக்கு தான் சுதந்திரம் கொடுத்தனர். நிர்வாக வசதிக்காக மாநிலங்களாக நாம் பிரித்துக் கொண்டோம்.

அமைச்சர் பொன்முடி : இந்தியாவில் இருந்து பிரிந்தது மாநிலங்கள் அல்ல. இந்தியா இருக்கும் போது எத்தனை மாநிலங்கள் இருந்தது என்று உங்களுக்கு தெரியுமா? எல்லோரும் இணைந்து உருவாக்கியதுதான் இந்தியா. இந்தியாவிலிருந்து பிரிந்தது மாநிலங்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

நீட் தேர்விலிருந்து விலக்கு  கேட்கும்போது குரல் கொடுக்க தயாரா?....பாஜவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
பேரவையில் நேற்று நயினார் நாகேந்திரன் (பாஜ) பேசுகையில், ‘‘நீட் தேர்வை பொறுத்தவரை மாணவர்கள் தயாராக வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 405 பேருக்கு மருத்துவ படிப்பு கிடைத்தது என்றார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு கிடைக்க வேண்டும் என்பது தான் ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய திமுகவின் நிலைப்பாடு. அதேபோன்று எதிர்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவின் உணர்வும் அதுதான். தேர்தல் அறிக்கையிலும் கூறியிருக்கிறார்கள். பொதுக்குழுவிலும் தீர்மானம் போட்டிருக்கிறார்கள். சட்டமன்றத்தில் பேசியிருக்கிறோம். அமைச்சரவையை கூட்டி தீர்மானம் போட்டிருக்கிறோம். தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்கும் போது, நீங்கள் குரல் கொடுக்க தயாரா என்பது தான் எனது கேள்வி என்றார்.
இதற்கு, நயினார் நாகேந்திரன், ‘‘சட்டத்திற்குட்பட்டு நடக்குமானால் நிச்சயமாக நாங்கள் குரல் கொடுப்போம்’’ என்றார்.

Tags : Mediterranean ,EU Government ,BC ,Q. ,Stalin , No one needs to stare at the word Why is the Central Government called the Union Government? ..... Chief Minister MK Stalin's explanation in the Assembly
× RELATED பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய...