கொள்ளிடம் பகுதியில் பருத்தி சாகுபடியில் பூச்சி தாக்குதல்-விவசாயிகள் அச்சம்

கொள்ளிடம் : கொள்ளிடம் பகுதியில் பருத்தி பயிரில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள நாதல் படுகை, திட்டுபடுகை, சந்தப்படுகை, முதலைமேடு, அளக்குடி, பச்சை பெருமாநல்லூர், பழையபளையம், ஆச்சாள்புரம், குன்னம், பெரம்பூர், பாலூரான்படுகை, பட்டியமேடு, மாதிரவேளூர், வடரங்கம், சிதம்பரநாதபுரம், சோதியகுடி உள்ளிட்ட பல கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் விவசாயிகள் பருத்தி பயிர் சாகுபடி செய்துள்ளனர். தற்போது பருத்தி பயிர் அறுவடைக்கு தயாராகி உள்ள நிலையில் பருத்தி பயிரில் பெரும்பாலும் ஒரு வகையான பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பருத்தி இலைகள் மற்றும் காய்கள் உதிர்ந்து கீழே விழுந்து விடுகின்றன. பஞ்சு வெடித்து பலன் தரக்கூடிய நிலையில் காய் முதிர்ச்சி அடையாமல் கீழே வயலில் விழுந்து விடுகிறது. இதுகுறித்து பருத்தி விவசாயிகள் கூறுகையில்,கொள்ளிடம் பகுதியில் பருத்தி பயிர் தற்போது அறுவடை செய்யும் நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் பருத்தியில் ஒரு வகையான பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் எதிர்பார்த்தபடி பருத்தி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எந்த வகையான பூச்சி தாக்குகிறது என்பதை கண்டறிவது சிரமமாக உள்ளது. ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தாலும் பூச்சி தாக்குதல் கட்டுக்கடங்காமல் உள்ளது.சில இடங்களில் மட்டும் பூச்சித்தாக்குதல் குறைந்து காணப்படுகிறது. இது எதனால் ஏற்படுகிறது என்பதை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories:

More
>