பள்ளி முன்னாள் மாணவிகளின் பாலியல் புகார் வழக்கில் சிக்கிய சிவசங்கர் பாபா மீது குவியும் புகார்கள்: காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி கோர்ட்டில் மனு

சென்னை: சென்னை அடுத்த கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா மீது,  முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் புகாரையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த சிவசங்கர்பாபாவை, சிபிசிஐடி போலீசார் டேராடூனில் கைது செய்தனர். சுஷில் ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது, குவிந்துவரும் பாலியல் புகார்கள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் டேராடூனில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை, சிபிசிஐடி எஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் நீண்ட விசாரணைக்கு பிறகு சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில், சிவசங்கர் பாபாவுக்கு மாணவிகளை மூளைச்சலவை செய்து நெருக்கமாக பழகவிட்ட அதே பள்ளி  ஆசிரியை சுஷ்மிதா 4 மாத கைக்குழந்தையுடன் கைது செய்யப்பட்டார்.  

இந்நிலையில், சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் குணவரதன் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் கடந்த 18ம் தேதி மனுதாக்கல் செய்தார். அன்றைய தினம் அரசு தரப்பு வழக்கறிஞர் வராததாலும், அவரது ஒப்பீனியன் இல்லை என்பதாலும், அம்மனு வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், சிவசங்கர் பாபாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று முன்தினம் மீண்டும் சிபிசிஐடி சார்பில், மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை,  ஒத்திவைத்து நீதிபதி அம்பிகா உத்தரவிட்டார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சிவசங்கர் பாபாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அவரது தரப்பு வழக்கறிஞர்கள்  ஆட்சேபனை மனு தாக்கல் செய்ய உள்ளனர். எனினும் அனைத்து தகவல்களையும் திரட்டும் வகையில் சிவசங்கர்பாபாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதில் சிபிசிஐடி போலீசார் உறுதியாக உள்ளனர்.

இந்நிலையில் அதே பள்ளியில் உள்ள பல ஆசிரியைகள் இந்த வழக்கில் கைது செய்யப்பட உள்ளனர். அதற்கு சிவசங்கர் பாபாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். இந்நிலையில், கைதாகி உள்ள  சிவசங்கர் பாபா மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. சுஷில் ஹரி பள்ளியில் மாணவிகள் மீது நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மத்திய அரசு கல்வி அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இதற்கிடையில், பெண்கள் ஆணைய பொறுப்பாளர்கள் பள்ளி மற்றும் ஆசிரம வளாகத்தில் மூன்று நாட்கள் விசாரணை நடத்திச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>