×

ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி தமிழகம்: ஆளுநர் உரைக்கு தலைவர்கள் வரவேற்பு

சென்னை: ஆளுநரின் உரை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி தமிழகம் செல்வதற்கான ஒன்றாக இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு எத்தகைய வளர்ச்சிப் பாதையில் பயணிக்கப் போகிறது என்பதை ஆளுநர்  உரையில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி தமிழகம் பீடுநடை போடும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. ராமதாஸ்(பாமக நிறுவனர்): வேளாண் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை  தாக்கல்  செய்யப்படும் என்று ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்டிருப்பது  வரவேற்கத்தக்கது.

பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும்,  தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இந்திய ரிசர்வ் வங்கியின்  முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் உள்ளிட்டோர் அடங்கிய ஆலோசனைக்குழு  அமைக்கப்படும், தமிழக அரசின் பொருளாதார நிலை குறித்த வெள்ளை அறிக்கை  வெளியிடப்படும் உள்ளிட்ட தமிழக அரசின் அறிவிப்புகள்  வரவேற்கத்தக்கவை  ஆகும். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில்  முன்னுரிமை, உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும், 69% இட ஒதுக்கீடு  பாதுகாக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. வைகோ(மதிமுக பொதுச்செயலாளர்): தமிழ் வழியில்  பயின்றோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை, ஊழலை ஒழித்திட லோக்  ஆயுக்தாவுக்கு உரிய அதிகாரம் வழங்குதல் போன்ற அறிவிப்புகள் ஊழல் இல்லாத  நிர்வாகத்தை உறுதி செய்யும். மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும்  நல்லாட்சியில், தமிழ்நாடு தலைநிமிர்ந்து பீடு நடைபோடும் என்ற நம்பிக்கையை  ஆளுநர் உரை ஏற்படுத்தி இருக்கின்றது.

முத்தரசன்(இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ): . இருள் மண்டி கிடந்த தமிழகத்தில் விடியலின் வெளிச்ச ஒளிக்கீற்றாக ஆளுநர் உரை அமைந்திருப்பதை வரவேற்கிறோம். கே.பாலகிருஷ்ணன்(மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): நீட் தேர்வால் தமிழக மருத்துவ மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை நீக்கும் வகையில் சட்டம் கொண்டு வர உள்ளது வரவேற்கத்தக்கது. திருமாவளவன்(விசிக தலைவர்):   அரசு வேலை வாய்ப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிலும் குறிப்பாகத் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அறிவிப்பு இளைஞர்களுக்கு பெரும் நம்பிக்கை தருவதாகும். சரத்குமார்(சமக தலைவர்): தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு நடவடிக்கை, இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை, தமிழ் வழிபயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை ஆகியவை வரவேற்க தகுந்த அம்சங்களாகும்.

நெல்லை முபாரக்(எஸ்.டி.பி.ஐ கட்சி தலைவர்):ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த மாநில உரிமைகளை பாதுகாப்பதற்கான அறிவிப்புகள், மாநில சுயாட்சி என்கிற இலக்கை எட்ட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. மேலும், கல்வி முன்னேற்றம், பொருளாதார மேம்பாடு மற்றும் வீட்டுவசதிகளை சிறுபான்மையினர் பெற சச்சார் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிற அறிவிப்பு. தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை வகுக்க நீதியரசர் இரத்னவேல் பாண்டியன் குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படும் என்கிற அறிவிப்பையும் வரவேற்கிறோம்.

Tags : T.N. ,Governor , Tamil Nadu towards a brighter future: Leaders welcome Governor's speech
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து