×

ஒட்டன்சத்திரம் அருகே சரியான திட்டமிடல் இல்லாமல் அமைக்கப்பட்ட புறவழிச்சாலை-அடிக்கடி விபத்தால் மாற்றுப்பாதை அமைக்க கோரிக்கை

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே, சரியான திட்டமிடல் இல்லாமல் அமைக்கப்பட்ட புறவழிச்சாலை மற்றும் மேம்பாலத்தால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால், மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் வழியாக மதுரை, திண்டுக்கல், தேனி, கோவை, திருப்பூர், உதகை ஆகிய நகரங்களுக்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை மற்றும் முக்கிய தினங்களில் காந்தி மார்க்கெட்டில் காய்கறி ஏற்ற வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையேற்று லெக்கையன்கோட்டை, கொல்லபட்டி, ஒட்டன்சத்திரம், அரசப்பபிள்ளைபட்டி ஆகிய கிராமங்கள் வழியாக சுமார் 10.1 கி.மீ தூரம் வரை நான்குவழிச்சாலைக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, மத்திய தரை வழி போக்குவரத்து மூலம் ரூ.159 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2017 டிசம்பரில் பணி தொடங்கப்பட்டு, பின்னர் தேர்தல் நெருங்கியதால் 2020ல் பணிகள் முடிக்கப்பட்டு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் புறவழிச்சாலை திறக்கப்பட்டது.

இந்நிலையில், வேடசந்தூர் சாலை, ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலை, அரசப்பபிள்ளைபட்டி ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன. இந்த நான்குவழிச்சாலை தொடங்கும் இடமான லெக்கையன்கோட்டையில் சரியான ரவுண்டானா இல்லாததால் திண்டுக்கல், மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் நகருக்கும், புறவழிச்சாலைக்கும் தடமாறி செல்வதால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்பட்டது. போக்குவரத்து காவல்துறையினர் தடுப்புகளை வைத்தும், வேகத்தடை அமைத்தும் ஓரளவிற்கு விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், லெக்கையன்கோட்டையிலிருந்து தாராபுரம், கோவை, திருப்பூர் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் தாராபுரம் சாலைப்பிரிவில் வடக்கு நோக்கி செல்வதற்கு வழியில்லாமல் மேற்கு நோக்கி எதிர்திசையில் சென்று குறுகலான பாதையில் சென்று, மீண்டும் வடக்கு நோக்கி தாராபுரம் சாலையை நோக்கி செல்கிறது. இது மிகவும் ஆபத்தான வளைவாகவும், அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.

இது குறித்து நாகணம்பட்டியைச் சேர்ந்த தண்டபாணி கூறுகையில், ‘கடந்த அதிமுக ஆட்சியில் வேலை முடியும் முன்பு அவசரகதியில் திறக்கப்பட்ட இம்மேம்பாலம் ரவுண்டானா ஏதும் இல்லாமல் உள்ளது. சரியான திட்டமிடல் இல்லை.குறிப்பாக நகர் பகுதியிலிருந்து நெடுஞ்சாலையை இணைக்கும் சாலைகள் பெரும் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இதனால், தினந்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. இதேபோல் அரசப்பிள்ளைபட்டி மேம்பாலமும் மழை காலங்களில் மழைநீர் சூழ்ந்து 10 ஊர்களை சேர்ந்த 20 ஆயிரம் பொதுமக்கள், அவர்களுடைய ஊர்களுக்கு செல்ல முடியாமல் மிகுந்த அவதிப்படுகின்றனர்.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் புறவழிச்சாலையை ஆய்வு செய்து, முக்கிய பகுதிகளில் ரவுண்டானா மற்றும் விபத்துக்களை தடுக்கும் விதமாக மாற்றம் செய்ய வேண்டும்’ எனக் கூறினார்.

Tags : Ottanchattiram , Ottansattram: Near Ottansattram, often by bypass and flyover set up without proper planning
× RELATED ஒட்டன்சத்திரம் அருகே டச்சு நாணயம் கண்டெடுப்பு