×

ஏலகிரி அடுத்த அத்தனாவூரில் 7 வருடமாக நிலவிய குடிநீர் பிரச்னைக்கு தீர்வு-எம்எல்ஏ நடவடிக்கையால் மக்கள் மகிழ்ச்சி

ஜோலார்பேட்டை : ஏலகிரி அடுத்த அத்தனாவூரில் 7 வருடமாக நிலவிய குடிநீர் பிரச்னைக்கு எம்எல்ஏ நடவடிக்கையால் தீர்வு கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை, அத்தனாவூர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.  

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் நீர் வற்றி போனது. இதனால், போதுமான குடிநீரின்றி தவித்து வந்தனர். விவசாய கிணற்றில் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.
குடிநீர் பிரச்சனையை தீர்க்க ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அத்தனாவூர் பகுதியில் அதிகாரிகளின் நடவடிக்கையால் திறந்தவெளி கிணறு வெட்டப்பட்டது. அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில் கிணற்றிலிருந்து தண்ணீரை மேல் நீர் தேக்கதொட்டிக்கு ஏற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்காமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏ தேவராஜி ஏலகிரி மலையில் பல்வேறு பணி குறித்து ஆய்வுக்கு சென்றார். அப்போது, அத்தனாவூர் பொதுமக்கள்  எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, எம்எல்ஏ  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடனடியாக குடிநீர் பிரச்னை குறித்து நடவடிக்கைக்கு  உத்தரவிட்டார். அத்தனாவூர் பகுதியிலிருந்து கரிகுட்டை வரை புதிதாக 13 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டது. மேலும், அத்தனாவூர் கிராமத்தில் பைப்லைன் அமைத்து  கிணற்றிலிருந்து நீர் எடுக்க வழிவகை செய்யப்பட்டது. இந்த பணிகளை எம்எல்ஏ தேவராஜி நேற்று தொடங்கி வைத்தார்.

அதேபோல், பள்ள கணியூர் அருகே உள்ள கனியூரான் வட்டம், மேட்டுகனியூர் ஆகிய பகுதிகளிலும் குடிநீர் வசதியை ஏற்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
இதில், வாணியம்பாடி அலுவலக மண்டல செயற்பொறியாளர் முகமது பாஷா, ஜோலார்பேட்டை உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், போர்மேன் பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : MLA ,Attanavur ,Yelagiri , Jolarpet: The people are happy that the MLA action has solved the drinking water problem that has prevailed for 7 years in Attanavur next to Yelagiri.
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு