×

தமிழக அரசிற்கு ஆலோசனை வழங்க ‘பொருளாதார நிபுணர் குழு’ : நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ, ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் நியமனம்!!

சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முதல்வருக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியதாவது, கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் உள்ளதைக் காண்கிறோம். இந்தப் போக்கை மாற்றியமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். வரும் சில ஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய மனிதவளத்தின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்தி, விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைய முற்படுவோம். இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கானப் பாதையை வகுத்து தமிழக அரசிற்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கிட ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’ ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது.  

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டஃப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்  பேராசிரியர் ரகுராம் ராஜன், ஒன்றிய அரசின்   முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர். அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜான் ட்ரீஸ், முன்னாள் ஒன்றிய நிதிச் செயலாளருமான டாக்டர் எஸ். நாராயண் ஆகிய உலகின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்கள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள். இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சி பெற செய்து, பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைவதை இந்த அரசு உறுதி செய்யும்,என்றார்.


Tags : Tamil Nadu government ,Esther Dufflo ,Bank ,Governor ,Raghuram Rajan , நிபுணர் குழு
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...