×

கொடைக்கானல் பகுதி மக்கள் அச்சம் ஒற்றை யானை சாலையில் உலா

கொடைக்கானல் : தாண்டிக்குடி பகுதியில் சாலையில் உலா வரும் ஒற்றை யானையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலையில் தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பாச்சலூர் உள்பட பல கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. வனப்பகுதியில் இருந்து வரும் யானைகள் இப்பகுதிக்குள் புகுந்து விளைபொருட்களை அழித்து வருவதுடன், விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகிறது.

நேற்று தாண்டிக்குடி பகுதியில் எதிரொலி பாறை செல்லக்கூடிய சாலையில் உலா வந்த ஒற்றை காட்டுயானை அவ்வழியே சென்ற வாகனங்களை வழிமறித்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் சம்பவ இடத்திற்கு யாருமே வரவில்லை என தெரிகிறது. பின்னர் அந்த யானை தானாகவே வனப்பகுதிக்குள் சென்று விட்டது. ஒற்றை யானை நடமாட்டத்தால் இப்பகுதி மக்கள், வாகனஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். காட்டுயானைகளை ஊருக்குள் வருவதை நிரந்தரமாக தடுக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kodaikanal , Kodaikanal, Elephant, People Fear
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்