×

கொரோனாவால் ஒரு உயிர்கூட பறிபோகாத நிலை வரும் போது, தமிழகத்தில் கோயில்கள் திறக்கப்படும் : அமைச்சர் சேகர் பாபு உறுதி

சென்னை : கொரோனாவால் ஒரு உயிர்கூட பறிபோகாத நிலை வரும் போது, தமிழகத்தில் கோயில்கள் திறக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சொத்துப் பட்டியலைப் போன்று கோயில்களில் உள்ள நகை பற்றிய விவரங்களை இணையதளத்தில் வெளியிட முடியாது; அது பாதுகாப்பு காரணத்திற்காக தான் என்று தெரிவித்துள்ளார். மேலும் கோவில் சொத்துக்களை அபகரித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.இதனிடையே கொரோனா பரவலால் கோவிலில் பக்தர்க்ளுக்கு மட்டுமே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் தொற்று பாதிப்பு முற்றிலும் இல்லை என எப்பொழுது நிலை வருகிறதோ அப்போது கோவில்களில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து நடந்த மண்டபத்தை புனரமைப்பு அமைப்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்த அவர் , கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்சி ஆமை வேகத்தில் நடந்தது; தற்போது நடக்கும் ஆட்சி முயல் வேகத்தில் நடக்கும் என்றார். மேலும் தீ விபத்தால் சேதம் அடைந்த வீர வசந்தராயர் மண்டபம் விரைவில் புனரமைக்கப்படும் என்று உறுதி அளித்த அவர், மீனாட்சி அம்மன் கோவிலில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கண்ணில் குறைபாடு ஏற்பட்டுள்ள கோவில் யானை பார்வதிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்றும் யானையின் கண் குறைபாட்டை சீர் செய்வதற்கு தேவைப்பட்டால் வெளிநாட்டில் இருந்து கூட மருத்துவர்களை அழைத்து வர தயாராக இருப்பதாக அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.இந்த ஆய்வில் நிதி அமைச்சர், கால்நடைத்துறை அமைச்சர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Tamil Nadu ,Minister ,Sehgar Babu , இந்து சமய அறநிலையத்துறை
× RELATED நடப்பு பருவத்திற்கு தேவையான உரம்...