×

வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் முருகன், நளினி வீடியோ காலில் பேசலாம்: உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் ஆகியோர், இலங்கை, லண்டனில் வசிக்கும் உறவினர்களுடன் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பேச அனுமதிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் ஆகியோரை லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் உள்ள முருகனின் தாயுடனும் வாட்ஸ் அப் வீடியோ மூலம் பேச அனுமதி கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வு விசாரித்தது. வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் இருவரையும் பேச அனுமதித்தால், ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் பன்முக விசாரணை முகமையின் விசாரணை பாதிக்கும் என மத்திய அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

2011ஆம் ஆண்டு அரசாணையின்படி, சிறைக் கைதிகள் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் பேச அனுமதி இல்லை எனவும், இந்தியாவில் உள்ள உறவினர்களுடன் 10 நாளைக்கு ஒருமுறை, மாதம் ஒன்றுக்கு 30 நிமிடத்திற்கு மிகாமல் 3 அழைப்புகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதாகவும், எனினும் அது சிறைவாசிகளின் அடிப்படை உரிமை இல்லை எனவும் தமிழக சிறைத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், நளினி, முருகனை வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பேச அனுமதியளித்து உத்தரவிட்டனர்.



Tags : Murugan ,Nalini , nalini, murugan
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்