பஞ்சாப், ராஜஸ்தான் உட்கட்சி மோதல் சோனியா காந்தி சமரச முயற்சி: அமரீந்தர், சித்து டெல்லிக்கு அழைப்பு: சச்சின் பைலட்டுக்கு 3 அமைச்சர் பதவி

புதுடெல்லி:   பஞ்சாப், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் சிங் உள்ளார். இங்கு அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சியில் மீண்டும் உட்கட்சி பூசல் தலைத் தூக்கியுள்ளது. அமரீந்தர் சிங்குக்கும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துக்கும் மோதல் நிலவி வருகிறது. இவர்களின் மோதலால் சட்டப்பேரவை தேர்தலில் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.  இதையடுத்து, இவர்களின் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தி  முயற்சிக்கிறார். பஞ்சாப் விவகாரத்தை ஆய்வு செய்வதற்காக மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் 3 பேர் குழுவை அமைத்தார். அது தனது அறிக்கையை சமர்பித்துள்ளது. இதில், சித்துவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அமரீந்தர் சிங்குக்கும், சித்துவுக்கும் வரும் 20ம் தேதி டெல்லியில் நேரில் வந்து சந்திக்கும்படி சோனியா உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல், ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் முன்னாள் துணை முதல்வருமான சச்சின் பைலட்டுக்கும் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. கடந்த முறை இவர் தனது ஆதரவு எம்எல்ஏ.க்களுடன்  பாஜ.வுக்கு தாவ முயற்சி செய்தபோது, சோனியா சமாதானப்படுத்தினார். அப்போது, அவருடைய ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையை விரிவுபடுத்தி பதவிகள்  வழங்குவதாக உறுதி அளித்தார். ஆனால், நீண்ட காலமாகியும் பதவிகள் வழங்கப்படாததால் சச்சின் பைலட் அதிருப்தி அடைந்தார். இந்நிலையில், அவருடைய ஆதரவாளர்கள் 3 பேருக்கு அமைச்சர் பதவிகளும், சச்சினுக்கு மீண்டும் துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள்  வெளியாகி இருக்கிறது.  ஆனால், சச்சின் பைலட் 5 அல்லது 6 அமைச்சர் பதவிகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

Related Stories: