முதல்வரிடம் 2 பவுன் செயினுடன் மனு பட்டதாரி இளம்பெண்ணுக்கு மூன்றே நாளில் வேலைவாய்ப்பு: வீட்டுக்கே சென்று பணி ஆணையை அமைச்சர் வழங்கினார்

மேட்டூர்: மேட்டூர் அணையை திறக்க வந்த இடத்தில், கொரோனா நிவாரண நிதிக்கு தான் அணிந்திருந்த 2 பவுன் செயினை கழற்றிக் கொடுத்து வேலைவாய்ப்பு கோரி மனு கொடுத்த பட்டதாரி பெண்ணுக்கு மூன்றே நாளில் வேலைவாய்ப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்தார். அதன்படி பணி நியமன ஆணையை அமைச்சர் அந்த பெண்ணின் வீட்டுக்கே சென்று வழங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டார். சேலத்திலிருந்து அவர் மேட்டூர் செல்லும் வழியில் பொட்டனேரி பகுதியில் சாலை ஓரம் நின்றிருந்த இன்ஜினியரிங் பட்டதாரி இளம்பெண் சௌமியா (22) முதல்வரிடம் கொரோனா நிவாரண நிதிக்காக தான் அணிந்திருந்த 2 பவுன் செயினை கழற்றிக்கொடுத்தார். அதோடு தனது குடும்ப சூழல் கருதி வேலைவேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு ஒன்றையும் கொடுத்தார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘பொன்மகளுக்கு படிப்புக்கேற்ற வேலை வழங்கப்படும்’’ என மனம் நெகிழ்ந்து முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, மேட்டூர் அருகே பொட்டனேரியில் செயல்படும் ஜே.எஸ்.டபிள்யூ. என்ற தனியார் நிறுவனத்தில் சௌமியாவுக்கு மாதம் ரூ.17 ஆயிரம் சம்பளத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பொட்டனேரியிலுள்ள சௌமியா வீட்டிற்கு நேரில் சென்று பணி நியமனத்துக்கான ஆணையை வழங்கினார். அப்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் சௌமியாவிற்கு வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து சௌமியா நிருபர்களிடம் கூறுகையில், ‘இவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுத்து எனக்கு பணி நியமன ஆணை வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. எந்த ஆட்சியிலும் இது போன்ற துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது இல்லை. முதல்வரின் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். உண்மையாக உழைப்பேன்’ என்றார்.

Related Stories: