×

கோவாக்சின் தடுப்பூசியின் 3ம் கட்ட சோதனை முடிவு விரைவில் வெளியிடப்படும்: பாரத் பயோடெக் நிறுவனம் தகவல்

ஐதராபாத்: ஏற்கனவே பல கோடி தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு செலுத்தப்பட்ட நிலையில், ‘கோவாக்சின்’ தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை முடிவுகளை விரைவில் வெளியிடுவதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்த, ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘கோவாக்சின்’ தடுப்பூசியும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டை புனேயை சேர்ந்த சீரம் நிறுவனமும், கோவாக்சினை ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும் உற்பத்தி செய்து வழங்குகின்றன. இதில், கோவாக்சின் தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனைகள் முடியும் முன்பாக, பயன்பாட்டுக் கொண்டு வரப்பட்டதாக ஏற்கனவே சர்ச்சை உள்ளது. இதன் காரணமாகவே, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் இதற்கு அனுமதி அளிக்க மறுத்து வருகின்றன.

கோவாக்சினை அமெரிக்காவில் விநியோகம் செய்ய நியமிக்கப்பட்டுள்ள ஒகுஜன் என்ற நிறுவனம், அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பிடம்  (எப்டிஏ) அனுமதி கோரி கடந்த மார்ச் மாதத்தில் விண்ணப்பம் செய்தது. ஆனால், இந்த தடுப்பூசியின் பரிசோதனை முடிவுகளில் ஒரு பகுதி மட்டுமே இணைக்கப்பட்டு இருந்ததால், எப்டிஏ அனுமதி அளிக்க சமீபத்தில் மறுத்தது. இறுதிக்கட்ட பரிசோதனை முடிவுகளையும் வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் கோவாக்சினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையாகி இருக்கிறது.
இந்நிலையில், ஏற்கனவே பல கோடி கோவாக்சின் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதன் 3ம் கட்ட பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் இணை இயக்குனர் மற்றும் கூட்டு நிர்வாக இயக்குநர் சுசித்ரா, டிவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘கோவாக்சினின் பாதுகாப்பும், திறனும் வெளிப்படையானவை. இது பற்றி இதுவரையில் 9 ஆராய்ச்சி ஆய்வுகளை வெளியிடப்பட்டு உள்ளது. கோவாக்சின் 2 கட்ட பரிசோதனைகள் முடித்துள்ளது. 3ம் கட்ட பரிசோதனைகள் ஒழுங்குமுறை அதிகாரிகளால் தொகுக்கப்பட்டு வருகிறது. இதன் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வில், கோசாக்சின் மருந்துதான் டெல்டா, ஆல்பா உருமாற்ற வைரசுகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது என்று கூறியுள்ளது,’ என தெரிவித்துள்ளார்.

* தொடர்ந்து குறையும் பாதிப்பு
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கை:
* கடந்த 24 மணி நேரத்தில் 80,834 பேருக்கு புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது, 71 நாட்களுக்கு பிறகு பதிவான குறைந்த பாதிப்பாகும். மொத்த பாதிப்பு 2 கோடியே 94 லட்சத்து 39 ஆயிரத்து 989.
* ஒரே நாளில் 3,303 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 3 லட்சத்து 70 ஆயிரத்து 384 ஆக உயர்ந்துள்ளது.
* நாடு முழுவதும் 10 லட்சத்து 26 ஆயிரத்து 159 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Bharat Biotech , The results of the 3rd phase of the Kovac vaccine test will be released soon: Bharat Biotech
× RELATED பாரத் பயோடெக் நிறுவனம் தகவல் இந்தியாவில் காசநோய் தடுப்பூசி பரிசோதனை