×

விசைத்தறிகள் தொடர்ந்து மூடல் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

ஈரோடு : ஈரோட்டில் விசைத்தறிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம், சோலார், அசோகபுரம், மாணிக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி செய்யப்பட்டு மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பபட்டு வருகின்றது.இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த 6ம் தேதி முதல் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் இந்த தொழிலை நம்பி உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரூ.100 கோடி மதிப்பிலான ஜவுளி உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பில் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள விசைத்தறிகள் மூலம் நாளொன்றுக்கு 24 லட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வடமாநிலங்களில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 மாதங்களாக ஆர்டர்கள் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் உற்பத்தியை பாதியாக குறைத்து 12 லட்சம் மீட்டர் துணிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.  இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த 6ம் தேதி முதல் முழு உற்பத்தியை நிறுத்திவிட்டோம். முழு உற்பத்தி நிறுத்தம் மூலம் நாளொன்றுக்கு ரூ. 7 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிப்பு என மொத்தம் ரூ.100 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி உள்ள 60 ஆயிரம் தொழிலாளர் வேலைவாய்ப்பை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்….

The post விசைத்தறிகள் தொடர்ந்து மூடல் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Veerappanchatram ,Chithod ,Lakkapuram ,Solar ,Ashokapuram ,Manikampalayam ,
× RELATED சித்தோடு மார்க்கெட்டிற்கு வெல்லம் வரத்து அதிகரிப்பு