×

தொடர்மழையால் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் கொட்டுது தண்ணீர்-காமராஜர் அணை நீர்மட்டம் கிடுகிடு

பட்டிவீரன்பட்டி : தாண்டிக்குடி, பெரும்பாறை, பில்லாவெளி, மஞ்சள்பரப்பு, கானல்காடு, தடியன்குடிமை, கல்லாங்கிணறு மற்றும் சுற்றியுள்ள மலைக்கிராம பகுதிகள், மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் குடகனாறு ஆற்றில் தண்ணீர் அதிகளவு வந்து கொண்டிருப்பதால் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளம்போல் கொட்டுகிறது. இதனால் திண்டுக்கல்லுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் காமராஜர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மேலும் இந்த அருவி தண்ணீரால் ஆத்தூர், நிலக்கோட்டை தாலுகாக்களில் 20க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு நீர்வரத்து வர ஆரம்பித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு மலையடிவாரத்தில் இருந்து இந்த அருவி 13 கிமீ தூரத்தில் உள்ளது. பெரும்பாறை- தாண்டிக்குடி மலைச்சாலையில் மஞ்சள் பரப்பு என்ற இடத்தில் இருந்து 300 அடி தூரம் சென்றால் இந்த அருவியை அடையலாம். அருவி விழும் பகுதி சுமார் 300 அடி பள்ளத்தாக்கு நிறைந்த ஆபத்தான பகுதியாகும், இந்ந அருவியில் குளிக்க சென்றவர்கள் மட்டுமின்றி மதுபோதையிலும் பலர் பலியாகியுள்ளனர்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கூட இங்கு மதுபிரியர்கள் மது அருந்தி விட்டு பாட்டில்களை உடைத்து செல்கின்றனர். இதனால் வனவிலங்குகளும் பாதிப்படைகின்றன. இதனை தடுக்க போலீசார், வனத்துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் உரிய வசதிகள் ஏற்படுத்தி சுற்றுலா தலமாக அமைத்தால் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pullaveli , Pattiviranapatti: Thandikudi, Perumparai, Billaveli, Manchalparappu, Kanalkadu, Tadiyankudimai, Kallanginara and surrounding areas
× RELATED பிஎஸ்என்எல் டவர்களில் சோதனை ஓட்டம்