×

காலநிலை மாற்றத்தால் காய்ப்பு திறன் குறைந்த முந்திரி மரங்கள்-மானாமதுரை பகுதி விவசாயிகள் கவலை

மானாமதுரை : பருவகாலத்தில் பெய்த அதிகப்படியான மழை, பூக்கள் பூக்கத்துவங்கிய காலத்தில் கடும் வெயில் காரணமாக இந்தாண்டு மானாமதுரை பகுதியில் முந்திரி விளைச்சல் குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.மானாமதுரை வட்டாரத்தில் உருளி, மாங்குடி, சிப்காட், தம்பிளிக்கான், நவத்தாவு, மாங்குளம், பூலாங்குளம், வேதியரேந்தல் விலக்கு உள்ளிட்ட செம்மண் பகுதிகளில் சமூக நலக்காடுகள் திட்டத்தின் கீழ் 20 ஆண்டுகளுக்கு முன் முந்திரி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. விவசாய நிலம், புறம்போக்கு, நீர்வழி பாதைகள், கிராம பொதுநிலங்களில் நடப்பட்ட முந்திரி மரக்கன்றுகள் கடந்த 10 ஆண்டுகளாக நல்ல பலனை தந்து வந்தன.

அதன்பின் சமூக நலக்காடுகள் திட்டத்தில் முந்திரி மரங்களுக்கு பதிலாக ஆற்றின் கரைகள், கண்மாய் கரைகள், வாய்க்கால் பகுதிகளில் தேக்கு மரங்களும், யூக்கலிப்டஸ் மரங்களும் நடப்படுவதால் இந்த மரங்களின் மூலம் விவசாயிகளுக்கு எந்த நேரடி பயனும் ஏற்படவில்லை.முந்திரி மரங்களில் இருந்து ஆண்டுதோறும் மே, ஜூன் மாதங்களில் முந்திரி பழங்களும், முந்திரி கொட்டைகளும் கிடைத்து வந்தன. இவற்றை பறித்து கிராமத்தினர் பழங்களை உள்ளூர் சந்தைகளில் விற்றும், பிரித்தெடுக்கப்பட்ட முந்திரி பருப்புகளை வெளிமார்க்கெட்டுகளிலும் விற்று வந்தனர். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெய்த கனமழை காரணமாக கண்மாய், குளங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகளவில் தண்ணீர் தேங்கியது.

வழக்கமாக முந்திரி மரங்களுக்கு காய்ப்பு சீசனில் தண்ணீர் குறைவாக தேவைப்படும். இந்த முறை பிப்ரவரி மார்ச்சில் கனமழையும் பூக்கள் விடும் காலமான மே மாதம் அக்னி நட்சத்திரம் காரணமாக கொளுத்திய வெயிலால் பிஞ்சுகள் உதிர்ந்து பூக்களும் கருகிப்போயின. இதனால் வழக்கமாக கிடைக்கும் முந்திரி பழங்களும், முந்திரிக்கொட்டைகளும் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயி சந்திரசேகர் கூறுகையில், ‘வழக்கமாக கோடை காலங்களில் முந்திரி சீசன் நன்றாக இருக்கும். இந்த முறை அதிக மழை, அதே அளவு வெயில் என காலமாற்றத்தால் பூக்கள் பூத்து உதிர்ந்து போய்விட்டது. மாங்குளம் பகுதியில் புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான முந்திரி மரங்களும் பராமரிப்பின்றி பெருமளவில் வெட்டி அளிக்கப்பட்டு விட்டது. மானாமதுரையை சுற்றிலும் தற்போது 5 ஆயிரத்திற்கும் குறைவான மரங்களே உள்ளன. விளைச்சல் குறைந்து போனதால் சந்தைகளுககு முந்திரி பழங்களும், பருப்புகளும் வரவில்லை’ என்றார்.

Tags : Manamadurai , Manamadurai: Heavy rains during the monsoon season and heavy sun during the flowering season will make Manamadurai this year.
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...