மருந்துகளுக்கு வரி விலக்கு நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

கொரோனாவுக்கு பயன்படுத்தப்படும் மருந்து, தடுப்பூசி, ஆக்சிஜன், பிபிஇ கிட், வென்டிலேட்டர், மாஸ்க் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும் பாஜ ஆட்சி இல்லாத மாநில முதல்வர்கள், பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை வைத்தனர். கடந்த மாதம் 29ம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரி விலக்கு அளிக்கப்படும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றம் தான் மிஞ்சியது. இந்த கூட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மட்டும் வரி விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, கொரோனா மருந்துகளுக்கு வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு குறித்து ஆராய மேகாலயா முதல்வர் தலைமையில் 8 மாநில நிதியமைச்சர்கள், துணை முதல்வர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த 7ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சிலிடம் அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த குழு தாக்கல் செய்த அறிக்கை குறித்து ஆலோசிக்கவும், வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு குறித்து பேசவும் நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடுகிறது.

கிராமங்களில் நேரடியாக  வருபவர்களுக்கு தடுப்பூசி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இணையதள  வசதி, ஸ்மார்ட் போன் வசதி இல்லாத தொலைதூர மற்றும் கிராம புறங்களில் வசிக்கும் மக்களுக்கு, கோ-வின் ஆப் கட்டாய பதிவு இல்லாமல் தடுப்பூசி போட வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள்  தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆன்லைன் பதிவு மட்டும் தடுப்பூசி போடுவதற்கு போதுமானது அல்ல. தடுப்பூசி மையத்திற்கு வரும் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். இணையம் வசதி இல்லாதவர்களுக்கும் வாழ்க்கை உரிமை உண்டு,’ என கூறி உள்ளார்.

தடுப்பூசி விலையை குறைக்க மத்திய அரசு பேச்சுவார்த்தை

பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக மருந்து நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்து வருகிறது. முதலில் கோவிஷீல்டு ₹200க்கும், கோவாக்சின் ₹200க்கும் வாங்கி வந்தது. பின்னர், தேவை அதிகரிப்பால் மருந்து நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரு தடுப்பூசிகளும் ₹150 ஆக குறைத்து வாங்கி வந்தது. தற்போது, நாடு முழுவதும் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு ₹50,000 கோடி செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி விலையை மேலும் குறைக்க இரு மருந்து நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பெற்றோருக்கு தொற்று மத்திய அரசு ஊழியர்களுக்கு  15 நாட்கள் விடுமுறை

மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு 15 நாள் சிறப்பு விடுமுறை அளிக்கப்படும். ஊழியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு 20 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். கொரோனா நோயாளியுடன் நேரடி தொடர்பில் இருந்து வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டால், அவர்களுக்கு 7 நாட்கள் வீட்டில் இருந்து பணி செய்ததாக எடுத்து கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான உத்தரவு ஜூன் 7ம் தேதியிட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடைமுறை கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் கணக்கிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏழை நாடுகளுக்கு 50 கோடி தடுப்பூசி பைடன் அறிவிப்பு

50 கோடி தடுப்பூசிகளை வாங்கி, குறைந்த மற்றும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கும், ஆப்ரிக்க யூனியனுக்கும் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் 20 கோடி தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும், மீதி உள்ள 30 கோடி தடுப்பூசிகள் அடுத்த ஆண்டு முதல் பாதியில் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் 8 கோடி தடுப்பூசி வழங்கப்படும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Related Stories:

>