×

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு; துணை நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் உத்தரவாதத்திற்கு 18 % வரி விதிப்பு

* தினை மாவு பாக்கெட்டுக்கு 5%
* வெல்ல பாகு வரி குறைப்பு

புதுடெல்லி: கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் துணை நிறுவனங்களுக்கு அளிக்கும் உத்தரவாதங்களுக்கு 18 % ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும், இயக்குநர் ஒருவர் தனிப்பட்ட உத்தரவாதம் அளித்தால் வரி விதிக்கப்படாது என்றும் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுத்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) தொடர்பாக 52 வது கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், வெல்லப்பாகு மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 28 % இருந்து 5 % குறைக்கப்படுகிறது.

மனித நுகர்வுக்கான ஆல்கஹால் தயாரிப்பதற்கான மூலப்பொருள் மீது வரி விதிக்கும் உரிமையையும் மாநிலங்களுக்கு வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின்னர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்,‘‘ வெல்ல பாகு மீது ஜிஎஸ்டி குறைப்பு கரும்பு விவசாயிகளுக்கு பயனளிக்கும். விவசாயிகளின் நிலுவை தொகையை ஆலைகள் விரைவாக கொடுக்க முடியும். இந்த நடவடிக்கையின் மூலம் கால்நடை தீவனங்களின் உற்பத்தி செலவை குறைக்க வழி வகுக்கும் ’’ என்றார். ஒன்றிய வருவாய் துறை செயலாளர் சஞ்சய் மல்கோத்ரா கூறுகையில்,‘‘கார்ப்பரேட் உத்தரவாதத்தை ஒரு நிறுவனத்திற்கு இயக்குனர் வழங்கும் போது, சேவையின் மதிப்பு பூஜ்யமாக கருதப்படும்.

ஒரு நிறுவனத்தால் அதன் துணை நிறுவனத்திற்கு கார்ப்பரேட் உத்தரவாதம் வழங்கப்படும் போது அதன் மதிப்பு கார்ப்பரேட் உத்தரவாதத்தில் 1 சதவீதம் என கருதப்படும். எனவே, தாய் நிறுவனத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மொத்த தொகையில் 1 %க்கு 18 % ஜிஎஸ்டி விதிக்கப்படும். தினை அடங்கிய மாவு பேக்கிங் செய்து லேபிள் ஒட்டப்பட்டு விற்றால் குறைந்த அளவிலான 5 % வரி விதிக்கப்படும். குறைந்தபட்சம் 70 சதவீத தினை அடங்கிய மாவு சில்லறையாக விற்பதற்கு பூஜ்ய % ஜிஎஸ்டியும், பேக்கிங் மற்றும் லேபிள் ஒட்டி விற்கப்படும் போது அதற்கு 5 % ஜிஎஸ்டி விதிக்கப்படும்’’ என்றார்.

ஜிஎஸ்டி மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் அதிகபட்ச வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜிஎஸ்டி மேல் முறையீட்டு தீர்ப்பாய தலைவர் பதவிக்கு அதிகபட்ச வயது வரம்பு 70 என்றும் உறுப்பினர்களுக்கு அதிகபட்ச வயது 67 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தலைவருக்கு 67 வயதும் உறுப்பினர்களுக்கு 65 ஆகவும் இருந்தது.

The post ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு; துணை நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் உத்தரவாதத்திற்கு 18 % வரி விதிப்பு appeared first on Dinakaran.

Tags : GST Council ,Batu ,New Delhi ,Dinakaraan ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு