×

பேரிடர் காலங்களில் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் நிகழும் ஆபத்தை வாட்ஸ்அப் எண் 9445869848ல் தெரிவிக்கலாம்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்

சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கனமழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்கள் குறித்தான எச்சரிக்கை தகவல்கள் TNSMART செயலி மூலமும், டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும், பேரிடர்கள் மற்றும் விபத்துக்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஏதுவாக, பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவும், படம் எடுத்து அனுப்பும் வகையிலும் 24 மணி நேரமும் இயங்கும் மாநில  அவசர  கட்டுப்பாட்டு  மையத்தில்  பேரிடர் முன்னெச்சரிக்கை மேலாண்மைக்கென தனிப்பட்ட வாட்ஸ்அப்  எண்: 94458 69848  துவக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலம் வரப்பெறும் பேரிடர்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் தொடர்புடைய அலுவலர்கள், துறைகளுக்கு அனுப்பப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது மட்டுமின்றி பொதுமக்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஏற்படும் பேரிடர் ஆபத்துகள் குறித்து தகவல்கள் தெரிவிக்க ஏதுவாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணையதளத்தில் மக்கள் களம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை தகவல்களை மேற்படி வாட்ஸ்அப் எண் மூலமாகவும், இணையதளம் வாயிலாகவும் தெரிவிக்கலாம். மேலும், பொதுமக்கள் 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம்.  மேலும், தாமினி செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துபவர்களுக்கு, தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 40 கிலோ மீட்டர் சுற்றளவில் இடி மற்றும் மின்னலின் தாக்கம் குறித்து 45 நிமிடங்களுக்கு முன்னர் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Tags : WhatsApp ,Minister ,KKSSR Ramachandran , Public can report hazards in their areas during disasters on WhatsApp number 9445869848: Minister KKSSR Ramachandran
× RELATED நெட் இல்லாமல் வாட்ஸ்அப்பில் தகவல்...