×

வேலூர் மாங்காய் மண்டி அருகே செயல்படும் தற்காலிக மொத்த காய்கறி மார்க்கெட்டை இரண்டாக பிரிக்க கோரிக்கை: அதிகளவு பொதுமக்கள் குவிந்ததால் கொரோனா பரவும் அபாயம்

வேலூர்: வேலூர் மாங்காய் மண்டி அருகே செயல்படும் தற்காலிக மொத்த காய்கறி மார்க்கெட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. வேலூர் மாங்காய் மண்டி அருகே தற்காலிக மொத்த காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள், வெளியமாநிலமான ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள், பழங்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மொத்த காய்கறி மார்க்கெட்டில் நேற்று அதிகாலை முதல் வியாபாரிகளும், பொதுமக்களும் மார்க்கெட்டில் அதிகளவில் சமூக இடைவெளியின்றி குவிந்தனர். இன்றும் ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் குவிந்தனர்.

இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் வியாபாரிகளும், பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. மேலும் பலர் முககவசம் அணியவில்லை. மொத்த வியாபாரம் மட்டும் நடத்த வேண்டும் என்ற உத்தரவை மீறி அங்கேயே கடைகள் வைத்து சில்லறை வியாபாரம் நடத்தப்பட்டு வருகிறது. இரு வியாபாரமும் ஒரே இடத்தில் நடத்தப்படுவதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. மேலும் மாவட்டத்தில் இருந்து அனைவரும் ஒரே இடத்திற்கு வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மொத்த வியாபார மார்க்கெட்டை இரண்டாக பிரித்து வேறு இடத்தில் வியாபாரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் உழவர் சந்தைகள் ஏற்கனவே இருந்ததை போல பள்ளி விளையாட்டு மைதானங்களில் செயல்படுத்த வேண்டும்.

நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய அவசியமும், தேவையினறி பொதுமக்கள் வெளியே சுற்றித்திரிவதை தடுக்க முடியும் எனறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா தொற்று இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டுக்கு வராத நிலையில், பொதுமக்கள் அச்சமின்றி குவிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சரக்கு வாகனங்களும் அதிகளவில் வந்ததால் வேலூர்-பெங்களூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  பொதுமக்களும், வியாபாரிகளும் சமூக இடைவெளி, முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்தால் மேலும் கொரோனா தொற்று அதிகமாக வாய்ப்பு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags : Vallur Mangai Mandi , Demand for splitting of the temporary wholesale vegetable market near Mangai Mandi, Vellore: risk of corona spreading due to overcrowding
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...