×

பெட்ரோல், டீசல் விலை 20வது முறையாக அதிகரிப்பு: மும்பையில் லிட்டர் 101.30 ஆனது

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை நேற்றும் உயர்த்தப்பட்டது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினத்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த மே 4ம் தேதி முதல் 19 முறை பெட்ரோல் விலை உயர்ந்ததால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட  மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றும் 20வது முறையாக பெட்ரோல் லிட்டருக்கு 21 பைசாவும், டீசல் லிட்டருக்கு 20 பைசாவும் உயர்ந்தன. இதனால், டெல்லியில் பெட்ரோல் விலை 95.09, டீசல் 86.01க்கு விற்பனை செய்யப்பட்டது. மும்பையில் பெட்ரோல் 101.30, டீசல் 93.35க்கு விற்கப்படுகிறது.

பெரு நகரங்களில் மும்பையில்தான் முதன் முதலில் பெட்ரோல் விலை சதமடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 20 முறை விலை அதிகரிப்பால் பெட்ரோல் 4.69, டீசல் 5.28 உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பீப்பாய் 72 டாலருக்கு அதிகமானதால் சில்லறை எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.



Tags : Mumbai , Petrol, diesel prices rise for the 20th time: 101.30 per liter in Mumbai
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!