லட்சத்தீவு அதிகாரியை திரும்ப பெற வேண்டும்: பிரதமருக்கு 93 மாஜி அதிகாரிகள் கடிதம்

புதுடெல்லி: சர்ச்சைக்குரிய லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை திரும்ப பெறக்கோரி, பிரதமர் மோடிக்கு முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 93 பேர் கடிதம் எழுதி உள்ளனர். இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு இயற்கை அழகை கொண்டுள்ளது. இங்கு சுற்றுலாத் துறை மற்றும் மீன்பிடி தொழில் முதுகெலும்பாக உள்ளது. அமைதியின் பிறப்பிடம் என்று அழைக்கப்படும் லட்சத்தீவில், மத்திய அரசால் சமீபத்தில் நியமிக்கப்பட்ட நிர்வாக அதிகாரியால் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. குறிப்பாக, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மாட்டிறைச்சிக்கு தடை, பள்ளிகளில் அசைவ உணவுக்கு தடை, மதுபான விற்பனைக்கு அனுமதி என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இவை பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.  அவரை உடனடியாக திரும்ப பெறும்படி சட்டப்பேரவையில் கேரள அரசு தீர்மானம் கூட நிறைவேற்றி உள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு முன்னாள்  ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 93 பேர், கூட்டாக அவசர கடிதம் எழுதி உள்ளனர். அதில், ‘லட்சத்தீவின் அழகிய யூனியன் பிரதேசத்தில் ‘அபிவிருத்தி’ என்ற பெயரில் பிறப்பிக்கப்பட்டு வரும் குழப்பமான சட்டங்கள் குறித்து எங்கள் ஆழ்ந்த கவலையை பதிவு செய்ய, தங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறோம்.  இந்த சட்டத் திருத்தங்கள் தீவு மக்கள் மற்றும்  பிரதிநிதிகளின் ஆலோசனையின்றி முன்மொழியப்பட்டு, தற்போது அவை மத்திய உள்துறை அமைக்கத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முன்மொழியப்பட்ட சட்டத் திருத்தங்கள் மக்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் மதநம்பிக்கை குறி வைக்கின்றன. எனவே, இந்த நிர்வாக அதிகாரியை உடனடியாக திரும்பெற வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளனர்.

Related Stories:

>