துணை முதல்வர் கோரிக்கையை கைவிட்டதால் பாஜ- என்.ஆர். காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு: புதுவையில் 14ம் தேதி அமைச்சர்கள் பதவி ஏற்பு

புதுச்சேரி:புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 10 தொகுதிகளில் வெற்றிபெற்ற என்ஆர் காங்கிரஸ், பாஜக ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. முதல்வராக ரங்கசாமி உடனே பதவியேற்றார். இருப்பினும் இதுவரை கூட்டணி அமைச்சரவை பதவியேற்கவில்லை. முக்கிய பதவிகளை பங்கிடுவது தொடர்பாக நீண்ட இழுபறிக்குபின் இரு கட்சிகள் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டது. இருப்பினும் இப்பதவிக்கு தங்கள் கட்சியில் தேர்ந்தெடுக்கப்படுவோரை இறுதி செய்வதிலும், முக்கிய இலாக்காக்களை பிரிப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. குறிப்பாக பாஜக, சபாநாயகர் பதவியை கேட்டு பெற்ற நிலையில் இதற்கு யாரை தேர்வு செய்வது என்பதை இறுதி செய்ய முடியாமல் திணறியது. மேலும் மாநில ஆட்சியில் தனது அதிகாரம் கோலோச்ச வேண்டுமென்பதில் உறுதியாக உள்ள பாஜக முக்கிய இலாக்காக்களை என்ஆர் காங்கிரசிடம் கேட்டு வலியுறுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு துணை முதல்வர் பதவியை வழங்க வேண்டுமெனவும் கோரி வந்தது.

 இதை தன்னை சந்தித்து 2 முறை ஆலோசித்த பாஜக மேலிட பார்வையாளரும், எம்பியுமான ராஜீவ் சந்திரசேகரின் பேச்சுவார்த்தையின்போது, முதல்வர் என்ற முறையில் நானே அமைச்சர்களுக்கு இலாக்காக்களை ஒதுக்குவேன், சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர்கள் பட்டியலை மட்டும் வழங்குங்கள் என ரங்கசாமி கூறியதாக தகவல்கள் வெளியாகின. மேலும் புதுச்சேரி அரசின் முக்கிய துறையான உள்துறையை பாஜவுக்கு வழங்க ரங்கசாமி முன்வந்திருப்பதாகவும், இதுதொடர்பாக டெல்லியில் உள்ள பாஜக தலைமையிடம் தானே பேசுவதாக கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் துணை முதல்வர் பதவி கோரிக்கையை பாஜக கைவிட்டுள்ளது. நீண்ட கால இழுபறி இதன்மூலம் முடிவுக்கு வந்திருப்பதாகவும், வரும் 14ம் தேதி புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளதாகவும் தெரிகிறது.

பதவி இரண்டாம்பட்சம்: நமச்சிவாயம் பேட்டி

புதுச்சேரி பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நமச்சிவாயம் கூறுகையில், தேஜ கூட்டணி தொடர்ந்து மாநில வளர்ச்சிக்காகவும், மக்களுக்காகவும் பாடுபடும். தேஜ கூட்டணி தலைவர்களும், தொண்டர்களும் ஓரணியில் இருந்து மாநில வளர்ச்சிக்கு பாடுபட தயாராக உள்ளோம். அமைச்சரவையில் 2 அமைச்சர்கள் வாங்கிட்டோமா அல்லது 3 அமைச்சர்கள் வாங்கிட்டோமா என்ற பேச்சுக்கு இடமில்லை. புதுவை மாநிலம் நன்றாக இருக்க வேண்டும். எங்களுக்கு பதவி முக்கியமல்ல. பதவி என்பது 2ம் பட்சம்தான். அதனால் நாங்கள் விட்டுக் கொடுத்து போக தயாராகி விட்டோம். துணை முதல்வர் பதவி தொடர்பாக தேசிய தலைமை முடிவு எடுத்து, அதனை முதல்வர் அறிவிப்பார். முதல்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது விரைவாக பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த நிலைமை விரைவில் மாறும்’’ என்றார்.

Related Stories:

>