×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் அனஸ்டேசியா

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, ரஷ்ய வீராங்கனை அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவா தகுதி பெற்றார். நான்காவது சுற்றில் பெலாரஸ் நட்சத்திரம் விக்டோரியா அசரென்காவுடன் (31 வயது, 16வது ரேங்க்) நேற்று மோதிய அனஸ்டேசியா (29 வயது, 32வது ரேங்க்) 5-7 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக விளையாடி அசரென்காவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த அவர் 6-3, 6-2 என்ற கணக்கில் அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி கால் இறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 9 நிமிடத்துக்கு நீடித்தது. சுமார் 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அனஸ்டேசியா கிராண்ட் ஸ்லாம் கால் இறுதியில் நுழைந்துள்ளார். மற்றொரு 4வது சுற்றில் ஸ்லோவேனியாவின் தமரா ஸிடான்செக் (23 வயது, 85வது ரேங்க்) 7-6 (7-4), 6-1 என்ற நேர் செட்களில் ருமேனியா வீராங்கனை சொரானா சிர்ஸ்டீயை (31 வயது, 54வது ரேங்க்) வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். கிராண்ட் ஸ்லாம் போட்டியின் கால் இறுதிக்கு தகுதி பெற்ற முதல் ஸ்லோவேனிய வீராங்கனை என்ற பெருமையை ஸிடான்செக் பெற்றுள்ளார்.

இதற்கு முன் அவர் 2வது சுற்றை தாண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பெயினின் பவுலா படோசா (23 வயது, 35வது ரேங்க்) தனது 4வது சுற்றில் செக் குடியரசின்மார்க்கெடா வோண்ட்ரூசோவாவை (21 வயது, 21வது ரேங்க்) 6-4, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். சிட்சிபாஸ் அசத்தல்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (22 வயது, 5வது ரேங்க்) 6-3, 6-2, 7-5 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் பாப்லோ கரினோ புஸ்டாவை (29 வயது, 12வது ரேங்க்) வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு 4வது சுற்றில் ரஷ்ய வீரர் டானில் மெட்வதேவ் (25 வயது, 2வது ரேங்க்) 6-2, 6-1, 7-5 என்ற நேர் செட்களில் சிலியின் கிறிஸ்டியன் கரினை (25 வயது, 23வது ரேங்க்) வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரில் கால் இறுதிக்கு முன்னேறினார். களிமண் தரை மைதானங்களில் தொடர்ச்சியாக சொதப்பி வந்த மெட்வதேவ், பிரெஞ்ச் ஓபனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டுகளை அள்ளி வருகிறார்.

பெடரர் சந்தேகம்: 3வது சுற்றில் ஜெர்மனியின் டொமினிக் கோப்பருடன் மோதிய சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் (39 வயது) 7-6 (7-5), 6-7 (3-7), 7-6 (7-4), 7-5 என 4 செட்களில் 3 மணி, 35 நிமிடம் போராடி வென்றார். முழங்கால் மூட்டு காயத்துக்காக இரண்டு முறை அறுவைசிகிச்சை செய்துகொண்டுள்ளதால், பிரெஞ்ச் ஓபனில் அவர் தொடர்ந்து விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. போட்டி நாளன்று கால்களின் வலுவைப் பொறுத்து அதை முடிவு செய்வேன் என்று பெடரர் தெரிவித்துள்ளார்.



Tags : French Open ,Anastasia , French Open tennis: Anastasia at the end of the quarter
× RELATED பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: அரையிறுதியில் ரைபாகினா