×

சசிகலா ஆடியோ வெளியான விவகாரம் ஓபிஎஸ் - இபிஎஸ் திடீர் சமரச பேச்சு: அதிமுகவில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தொண்டர்கள் குழப்பம்

சென்னை: அதிமுக தொண்டர்களுடன் சசிகலா தொடர்ந்து செல்போனில் பேசி, கட்சியை மீட்பேன் என்று கூறி வருகிறார். இந்த நிலையில், தனித்தனி அணியாக செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென நேரில் சந்தித்து பேசினார். இதுபோன்ற சம்பவங்களால், அதிமுக கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. 179 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, ஆட்சியை இழந்தது. தற்போது தமிழகத்தில் எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது. முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர் பதவியை பிடிக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடும் போட்டி நிலவியது.

ஆனாலும், அதிக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்ததால், எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டார். ஆனாலும், அதிமுக சட்டமன்ற கட்சியின் துணை தலைவர் மற்றும் கொறடா யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சென்னையில் இருந்தால் கூட ஒருவருக்கொருவர் நேரடியாக சந்திக்காமல் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் மதியம் திடீரென சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு, அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டார். இது ஒருபுறம் இருக்க, சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா சில மாதங்கள் அமைதியாக இருந்தார். தற்போது அதிமுக தொண்டர்களுடன் சசிகலா அடிக்கடி செல்போனில் பேசி வருகிறார். ‘நான் மீண்டும் அரசியலுக்கு வருவேன். அதிமுக கட்சியை விட்டு என்றைக்கும் விலக மாட்டேன்’ என்று பேசி வருகிறார். இதுபற்றி நேற்று முன்தினம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, ‘வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவில் குழப்பம் விளைவிக்க சசிகலா ஆடியோ வெளியிட்டு வருகிறார். சசிகலா தற்போது அதிமுகவில் இல்லை’ என்று கூறினார். அதேநேரம் சசிகலாவின் ஆடியோ பேச்சுக்கு இதுவரை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எந்த கருத்தையும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார்.

இந்த பரபரப்பான நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை எழும்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உடன் இருந்தார். இபிஎஸ்-ஒபிஎஸ் இருவரும் நீண்டநாட்கள் சந்திக்காத நிலையில், நேற்று திடீரென சந்தித்து பேசியது அதிமுகவினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின்போது, அதிமுகவை கைப்பற்ற சசிகலா திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். அதனால், இருவரும் இணைந்து செயல்பட்டால்தான் அதை தடுக்க முடியும் என்று சமரசம் பேசியதாக கூறப்படுகிறது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நாள் முதல் கட்சிக்குள் நிறைய குழப்பம் நிலவி வருகிறது.  முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது ரூ.2,028 கோடி ஊழல் புகார், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் என கட்சிக்குள் குற்றச்சாட்டுகளும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இருவரும் சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகன் சமீபத்தில் மரணம் அடைந்தார்.  அதனால் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்’ என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும், கட்சிக்குள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அதிமுக தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Tags : Sasicila ,EPS , Sasikala Audio Release OBS - EPS Sudden Compromise Talk: Volunteers Confused Not Knowing What Happens In AIADMK
× RELATED சொல்லிட்டாங்க…