×

முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் புதிய வாகன பதிவில் கடும் சரிவு: உற்பத்தி மையங்கள், ஷோரூம்களிலேயே தேக்கம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுவது கடும் சரிவை சந்தித்துள்ளது. புதிய வாகனங்கள் ஆங்காங்குள்ள உற்பத்தி மையங்கள் மற்றும் ஷோரூம்களில் பெருமளவில் தேங்கியிருக்கிறது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 2.82 கோடி வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. புதிதாக வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள், ஆங்காங்குள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் பதிவு செய்யப்படுகின்றன.

இதற்காக சென்னை, தாம்பரம், பூந்தமல்லி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி என 80க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்டிஓ அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, புதிதாக ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், எல்எல்ஆர் பதிவு, வரி செலுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதிக அளவில் புதிய வாகனங்கள் பதிவு செய்யும் பணி நடக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவத்தொடங்கியது.  முதல் அலையை விட கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும்  பாதிப்பை சந்தித்துள்ளனர். இதைக்கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகிறது.

இதில், முக்கியமானதாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு,  அமலில் உள்ளது.இதனால் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு  வருகிறது. மற்ற அனைத்து பணிகளும் முடங்கியுள்ளது. இந்த முழு ஊரடங்கின்  அடிப்படையில் வாகன விற்பனை ஷோரூம்களும் திறக்கப்படவில்லை. இதனால் அங்கு  வாகனங்கள் விற்பனையாகவில்லை. இதனால் புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும், ஆங்காங்குள்ள  உற்பத்தி மையங்களிலும், ஷோரூம்களிலும் தேங்கியுள்ளது. இதன்காரணமாக தமிழகம்  முழுவதும் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் வாகனங்கள் புதிதாக பதிவு  செய்யப்படுவது, பெருமளவில் குறைந்துள்ளது. அதாவது கடந்த ஜனவரி மாதம்  தமிழகம் முழுவதும் 1.54 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுவே  கடந்த மே மாதம் 23 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே பதிவாகியிருக்கிறது.

ஊரடங்கு தொடரும் பட்சத்தில் வாகன விற்பனை மேலும் குறையும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக கொரோனா முதல் அலையை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.  இதனால் கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஆர்டிஓ அலுவலகங்கள் செயல்படவில்லை. மேலும் வாகன விற்பனை இதனால் புதிதாக வாகனம் விற்பனை பதிவு செய்யப்படுவது, கடும் சரிவை சந்தித்தது. பிறகு தொற்று குறைந்தது. இதையடுத்து ஆர்டிஓ அலுவலகங்கள் மீண்டும் செயல்படத்துவங்கியது. இதனால் வாகனங்கள் விற்பனை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்க துவங்கியது. குறிப்பாக இவ்வாண்டின் துவக்கத்தில் வாகன விற்பனை இயல்பு நிலைக்கு திரும்பியது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனால் முழு ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்படும் பட்சத்தில் வாகன விற்பனை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்கும். அதன்பிறகு ஆர்டிஓ அலுவலகங்களில் புதிதாக வாகனங்கள் பதிவு செய்யப்படுவதும் அதிகரிக்கும் என போக்குவரத்தத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Tamil Nadu , New vehicle registrations plummet in Tamil Nadu due to complete curfew: Stagnation in manufacturing centers and showrooms
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...