×

தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.1000 கோடி ஒதுக்க வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தமிழ்மொழி வளர்ச்சிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கக்கோரிய வழக்கில் மத்திய அரசுத்தரப்பில் பதிலளிக்க ஐகோர்ட் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: இந்தியாவில் உள்ள 6 மொழிகள் செம்மொழியாக தேர்வு செய்யப்பட்டன. இந்த மொழிகளிலேயே பழமையானது தமிழ் மொழி. உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கு அதிகமான தமிழர்கள் உள்ளனர். ஆனால், மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக ரூ.22.94 கோடி மட்டுமே ஒதுக்கியது. சில ஆயிரம் பேர் மட்டும் பயன்படுத்தும் சமஸ்கிருத மொழிக்கு மட்டும் 3 ஆண்டுகளில் ரூ.643.85 கோடி ஒதுக்கியுள்ளது.

தமிழ் மொழிக்கு ஒதுக்கப்பட்டதை விட கூடுதலாக சமஸ்கிருதத்திற்கு 22 சதவீதம் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, செம்மொழியான தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யவும், மத்திய செம்மொழி கல்வி நிறுவனத்தை நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாற்றவும், இந்தியா முழுவதும் செம்மொழியான தமிழை கொண்டு செல்ல போதுமான கல்வி நிறுவனங்களை துவங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர், மனுவிற்கு மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக.8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Central government ,Icourt , Rs 1000 crore allocation case for Tamil language development: ICC order to respond to Central Government
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...