×

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு கோயம்பேடு காய்கறி சந்தையில் அனுமதியில்லை!: சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி..!!

சென்னை: கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத வியாபாரிகள், தொழிலாளர்கள் கோயம்பேடு காய்கறி சந்தையில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். கோயம்பேடு சந்தையில் கொரோனா தடுப்பு விதிகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று புகார் எழுந்ததை அடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் சி.எம்.டி.ஏ. நிர்வாக செயலாளர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதையடுத்து தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அவர்கள், பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 


அப்போது வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டிருப்பதாக மாநகராட்சி ஆணையர்  ககன்தீப் சிங் பேடி கூறினார். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் சந்தைக்கு வரக்கூடாது என்று விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கோயம்பேடு சந்தையில் உயர் கோபுரங்கள் அமைத்து இரவு நேரங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். 


கோயம்பேடு சந்தையில் அடுத்த 10 நாட்களுக்குள் வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தொற்று பரவல் ஏற்படாமல் இருக்க கடைகளுக்கான இடைவெளியை அதிகரிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக கூறிய சி.எம்.டி.ஏ. நிர்வாக செயலாளர் சின்சோங்கம் ஜோடக் சிரோ, கடந்த மாதத்தில் மட்டும் விதிகளை மீறியவர்களிடம் 11 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். 



Tags : Coimbatu Vegetable Market ,Chennai Municipal Commissioner ,Gagandeep Singh Badi , Corona Vaccine, Traders, Labor, Coimbatore Market, Corporation Commissioner
× RELATED பெரவள்ளூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்