திருப்பத்தூர்: கொரோனா தடுப்பூசியை அச்சமின்றி பொதுமக்கள் செலுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சிவன்அருள் கூறினார்.
கொரோனா தொற்று தடுப்பு மருந்துகள், ஊட்டச்சத்து பொருட்கள் வழங்குதல் மற்றும் ‘சிறந்த சமூக சேவகர் விருது’ வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரியில் நேற்று நடைபெற்றது. அதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு ₹15 லட்சம் மதிப்பில் வீட்டு உபயோக மருத்துவ உபகரணங்கள், ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டன. மருத்துவ உபகரண தொகுப்பில் பல்ஸ்ஆக்ஸி மீட்டர், முகக்கவசம், தெர்மா மீட்டர், நோய் எதிர்ப்பு சக்தி மருந்து மாத்திரைகள் அடங்கியுள்ளது.
நிகழ்ச்சியில், கலெக்டர் சிவன்அருள் பேசியதாவது: திருப்பத்தூர் மாவட்டம் முழுதும் தினமும் 5 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. வீடு,வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்ததில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஆரம்ப நிலையில் இருந்தது தெரியவந்தது. அதையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இன்னும் 90 சதவீதத்திற்கு மேல் தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டியுள்ளது.
பொதுமக்கள் தடுப்பூசி மீது தேவையற்ற அச்சத்தை தவிர்த்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி மட்டுமே நோயிலிருந்து மக்களைக் காக்கும் ஆயுதமாகும். தடுப்பூசி செலுத்துவதால் கொரோனா வந்தாலும் அபாய நிலைக்கு நோயாளியை கொண்டு செல்வதை தவிர்த்திடும். இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் யாரும் அபாய கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்திலேயே முதன் முறையாக மாவட்டம் முழுதும் 4 இடங்களில் கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், சித்த மருத்துவ மையம் தொடங்கப்பட்டு, வீடுவீடாக சென்று கொரோனா தொற்று தடுப்பு சிகிச்சை சித்த மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றது. மருத்துவமனைகளில் மருத்துவர்கள் செவிலியர்கள் இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட தன்னலமற்று பணியாற்றி வருகின்றார்கள்.
தமிழக முதலமைச்சர் இந்த நோய் தொற்றை குறைத்திட அனைத்து பகுதிகளிலும் சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் அமைச்சர் கண்காணித்திட உத்தரவிட்டதன், அடிப்படையில் அமைச்சர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், தொடர்ந்து தடுப்பூசி முகாம்கள் நடைபெறுவதையும், நோய் சிகிச்சை அளிக்கப்படுவது நாள்தோறும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள்.
அதேபோல் பொதுமக்களிடமும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றார்கள். இதுபோன்ற காலகட்டத்தில் திருப்பத்தூரில் அடையாளமான தூய நெஞ்சக் கல்லூரி கோவிட் 19 நோய் தொற்றை குறைப்பதற்கு தன்னுடைய பங்களிப்பை அளிக்கும் விதமாக தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு சிகிச்சை மையத்தில் அமைத்திட பள்ளியையும், தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்தினை சித்த மருத்துவ பிரிவிற்கும் வழங்கி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பெருந்துறை குறைத்திட செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது.
தற்போது இந்த பெரும் தொற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், நோய் சிகிச்சையில் உள்ள குடும்பங்களுக்கும் மருத்துவ உபகரண கிப்ட் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஊட்டச்சத்து பொருட்களை 500 குடும்பங்களை கண்டறிந்து வழங்குவது மிகவும் போற்றுதலுக்கு உரியது. அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், சித்த மருத்துவர் விக்ரம் குமாருக்கு “சிறந்த சமூக சேவகர்\” விருது கல்லூரியின் சார்பாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் அ.நல்லதம்பி (திருப்பத்தூர்), டி.மதியழகன் (பருகூர்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.விஜயகுமார், இ.கா.ப கல்லூரியின் இல்லத்தந்தை ஜான் அலெக்ஸாண்டர், கல்லூரி முதல்வர் மரிய அந்தோணிராஜ், கூடுதல் முதல்வர் மரிய ஆரோக்கியராஜ், பொருளாளர் சத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
