×

தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் சட்டம் நடைமுறைக்கு வந்தது

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறையின் முதன்மை செயலாளர் மணிவாசன் நேற்று முன்தினம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: குடும்பன், பள்ளன், தேவாரகுளத்தான், கடையன், பன்னடி மற்றும் கள்ளடி ஆகிய 7 பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், தங்களை ‘தேவேந்திர குல வேளாளர்’ என்ற ஒரே பெயரில் அழைக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மக்களிடமிருந்து கோரிக்கை வந்ததையடுத்து, இதற்கு பிரத்தியேக குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவராக கிராம அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மாவும், உறுப்பினர்களாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர், சட்டத்துறையின் செயலாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த கமிட்டி தங்களது அறிக்கையினை கடந்த நவம்பர் 28ம் தேதி அரசுக்கு சமர்பித்தது. அதில் சம்மந்தப்பட்ட 7 பிரிவுகளைச் சேர்ந்தவர்களை ‘தேவேந்திர குல வேளாளர்’ என்ற பெயரில் அழைக்கலாம் என தெரிவித்திருந்தது. இதனை அரசு ஏற்றுக்கொண்டது. பிறகு இந்திய அரசுக்கு சம்மந்தப்பட்ட சட்டத்தை ஏற்றுவதற்காக அனுப்பி வைத்தது. இதனைத்தொடர்ந்து பாராளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. எனவே சாதி சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள், இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயம் பட்டியல் பிரிவை சேர்ந்த தகுதியான மற்றும் உண்மையான நபர்களுக்கு ‘தேவேந்திர குல வேளாளர்’ என்ற பெயரில் சாதி சான்று வழங்க வேண்டும். இது 2021ம் ஆண்டு மே 15ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இதனை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் மற்றும் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகள் கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Devendra Kula , Devendra Kula Vellalar Name Change Act came into force
× RELATED பாஜக அரசு ஏமாற்றிவிட்டதாக புதிய...