நடிகை சாந்தினியுடன் குடும்பம் நடத்திய விவகாரம் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக மேலும் முக்கிய ஆதாரங்கள் சிக்கியது: நவீன தொழில்நுட்ப உதவியுடன் நெருங்கியது தனிப்படை

சென்னை: நடிகை சாந்தினியுடன் குடும்பம் நடத்திய விவகாரத்தில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக மேலும் சில முக்கிய ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து தலைமறைவாக உள்ள மணிகண்டனை தனிப்படை போலீசார் நவீன தொழில் நுட்ப உதவியுடன் நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திரைப்பட நடிகை சாந்தினி(36), சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், திருமணம் செய்வதாக கூறி தன்னுடன் ஒரே வீட்டில் 5 ஆண்டுகளாக கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும், இதனால் நான் மூன்று முறை கருவுற்றேன்.

என்னை மிரட்டி அவர் கருவை கலைத்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் என்னுடன் ஒன்றாக இருக்கும் போது எடுத்த நிர்வாண படங்கள் மற்றும் குளியல் அறையில் எடுத்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி தமிழகத்தில் இருந்து மலேசியாவுக்கு சென்றுவிடு என்று கொலை மிரட்டல் விடுத்தாக புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி அடையார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் பலாத்காரம் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தன் மீது வழக்கு பதிவு செய்த தகவலை அறிந்த மணிகண்டன் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் அவரது சொந்த ஊருக்கு விரைந்துள்ளனர். சொந்த ஊருக்கு தனிப்படை போலீசார் வந்துள்ளதை அறிந்த மணிகண்டன் தனது நண்பர்கள் உதவியுடன் ரகசிய இடத்தில் பதுங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. மணிகண்டன் பயன்படுத்திய 2 செல்போன்கள், அவரது உதவியாளர் செல்போன், குடும்பத்தினரின் செல்போன் சிக்னல்களை வைத்து போலீசார் மணிகண்டனை தேடி வருகின்றனர். மேலும், நடிகையுடன் குடும்பம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் மணிகண்டனுக்கு உடந்தையாக இருந்த பரணியும் தலைமறைவாக உள்ளார். அவரையும் பிடிக்க தனிப்படை ஒன்று விரைந்துள்ளது.

பாலியல் வழக்கில் போலீசார் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து இருந்தாலும், அதிமுகவை சேர்ந்த மணிகண்டன் முன்னாள் அமைச்சர் என்பதால் அவரை கைது செய்ய வலுவான ஆதாரங்களை போலீசார் சேகரித்து வந்தனர். மேலும், நடிகை சாந்தினி புகார் அளிக்கும் போது கொடுத்த ஆபாச புகைப்படம், இருவரும் ஒன்றாக இருக்கும் நிர்வாண வீடியோக்கள், வாட்ஸ் அப் உரையாடல்கள், மெசேஜ்கள் என அனைத்தும் போலீசார் அதன் உண்மை தன்மை பற்றி ஆய்வு செய்ய தடய அறிவியல் துறைக்கு அனுப்பி வைத்தனர். அதன் அறிக்கை ஓரிரு நாளில் வரும் என்று கூறப்படுகிறது.

அதே நேரம் மணிகண்டன் தமிழக அமைச்சராக இருந்தபோது தனது பதவியை தவறாக பயன்படுத்தி மேலும் சில நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததற்கான முக்கிய ஆதாரங்கள் போலீசாருக்கு சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஆதாரங்களின்படி முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே மணிகண்டனால் மூன்று முறை கருவுற்றதாக நடிகை சாந்தினி புகாரில் கூறியுள்ளார். இதனால் கருகலைப்பு செய்ததாக கூறப்படும் கோபாலபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பி உள்ளனர்.

அமைச்சர் மீது போலீசார் பாலியல் பலாத்காரம் வழக்கு பதிவு செய்த தகவலை தொடர்ந்து, அவரால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் சிலர் காவல் துறையில் புகார் அளிக்க முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மணிகண்டன் போலீசார் பிடியில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு குறைவு என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>