×

இலங்கைக்கு இந்தியாவின் 3வது அணியை அனுப்பினாலும் வெற்றிதான்: பாகிஸ்தான் மாஜி வீரர் கம்ரன் அக்மல்

கராச்சி: விராட் கோஹ்லி, ரோஹித்சர்மா, பும்ரா போன்ற மூத்த வீரர்களைக் கொண்ட இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. அதே வேளையில், ஐபிஎல்லில் சிறப்பாக ஆடிய இளம் வீரர்களைக் கொண்ட மற்றொரு இந்திய அணி ஜூலை மாதம் இலங்கைக்கு எதிராக தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் கிரிக்கெட்  தொடர்களில் பங்கேற்று விளையாடவுள்ளது. போட்டிகள் ஜூலை 13ஆம் தேதி முதல்  துவங்கும். அக்டோபரில் டி20 உலகக் கோப்பை துவங்கவுள்ளதால் அதற்கு இளம்  வீரர்களை தயார்ப்படுத்தும் நோக்கில் இத்தொடரை பிசிசிஐ ஏற்பாடு  செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அணியில் ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா போன்ற சில மூத்த வீரர்கள் மட்டுமே இடம்பிடிப்பார்கள் எனக் கூறப்படுகிறது. இதனால், அனுபவம் வாய்ந்த வீரர் தவானை கேப்டனாக நியமிக்க வேண்டும் என பலர் கூறுகின்றனர். இன்னும் சிலரோ, எதிர்கால இந்திய அணியைக் கருத்தில்கொண்டு இளம் வீரரை கேப்டனாக நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இத்தொடர் குறித்து பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவால் ஒரே நேரத்தில் மூன்று அணிகளைச் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறக்க முடியும் என்று புகழ்ந்துள்ளார். அவர் கூறுகையில் “இந்தியாவில் கிரிக்கெட் உள்கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. இதற்குக் காரணம், அவர்கள் கீழ்மட்டத்திலிருந்தே வீரர்களை திறமைமிக்கவர்களாக உருவாக்குகின்றனர். இந்திய அணி அடுத்து இலங்கை சுற்றுப் பயணத்தில் பங்கேற்கவுள்ளது. இதற்கு இளம் வீரர்களை அனுப்பவுள்ளனர். இந்தியாவின் மூன்றாவது அணியை அங்கு அனுப்பினாலும் நிச்சயம் வெற்றிபெறும். அப்படிப்பட்ட பலமான வீரர்களை இந்தியா தன்வசம் வைத்துள்ளது. மேலும் ராகுல் டிராவிட் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக பிசிசிஐக்கு வேலை செய்துவருகிறார். இளம் வீரர்களை இவர் உருவாக்கி அனுப்ப, சர்வதேச கிரிக்கெட்டில் அவர்களை ரவிசாஸ்திரி மேலும் மெருகேற்றுகிறார். கோலி இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். கோலிக்கு ஒருவேளை ஓய்வு தேவைப்பட்டாலும், கேப்டனாக செயல்பட அணியில் பலருக்குத் தகுதியுள்ளது. இதனால், இந்திய அணிக்கு தற்போது எந்த பிரச்சினையும் இல்லை” என்று கூறினார்.

Tags : India ,Sri Lanka ,Pakistan ,Kamran Akmal , Sending India's 3rd team to Sri Lanka is a victory: Former Pakistan cricketer Kamran Akmal
× RELATED 4 ஐஎஸ் தீவிரவாதிகளை இந்தியாவே விசாரிக்கும்: இலங்கை அறிவிப்பு