×

பிரதமர் மோடி ஆய்வு கூட்டத்தை மம்தா புறக்கணித்ததால் மேற்கு வங்க தலைமை செயலாளர் மத்திய அரசு பணிக்கு அதிரடி மாற்றம்

புதுடெல்லி: பிரதமர் மோடியுடனான ஆய்வுக் கூட்டத்தை மம்தா புறக்கணித்த நிலையில், மேற்கு வங்க தலைமை செயலாளர் மத்திய அரசு பணிக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   யாஸ் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் சேதங்களை நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஆய்வு செய்தார். அப்போது, கொல்கத்தாவில் மோடி கலந்து கொண்ட ஆய்வு கூட்டத்திற்கு,   சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக வந்த முதல்வர் மம்தா, நிவாரண நிதியாக 20,000 கோடி கேட்டு புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை கொடுத்தார். மேலும், பிரதமர் மோடியிடம் எதுவும் பேசாமல் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு 15 நிமிடங்களில் கிளம்பி சென்று விட்டார். ஆய்வு கூட்டத்திற்கு மாநில எதிர்க்கட்சி தலைவரான பாஜவின் சுவேந்து அதிகாரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால், மம்தா இவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தால் மத்திய அரசுக்கும், மேற்கு வங்க அரசுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

பிரதமரின் ஆய்வுக் கூட்டத்திற்கு வராத நிலையில், மேற்கு வங்க தலைமை செயலாளரை மத்திய அரசு பணிக்கு அதிரடியாக மத்திய அரசு நேற்று மாற்றி உள்ளது. இதுகுறித்து, மத்திய பணியாளர் அமைச்சகம் மேற்குவங்க அரசுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், ‘‘மேற்குவங்க தலைமைச் செயலாளர் பாண்டியோபாத்யாவின் பணி ஓய்வுகாலம் முடிவுற்ற நிலையில், அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கான உத்தரவை மேற்குவங்க அரசு பிறப்பிக்க வேண்டும். இதற்கான தகவலை வரும் மே 31ம் தேதி காலை 10 மணிக்குள் மத்திய பணியாளர் அமைச்சகத்திற்கு தெரிவிக்க வேண்டும். பணிநியமனம் மற்றும் திரும்ப அழைத்தல் தொடர்பான அறிவிப்பானது பணியாளர் நியமனம் தொடர்பான மத்திய அமைச்சரவை ஒப்புதலின் படி உடனடியாக அமலுக்கு வருகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் மேற்கு வங்க தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் சின்ஹா ​​ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைமைச் செயலாளராக பாண்டியோபாத்யாய் பொறுப்பேற்றார். இவருக்கு 60 வயதான நிலையில், வரும் 31ம் தேதி ஓய்வு பெறவிருந்தார். இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் மூன்று மாத காலம் பணி நீட்டிப்பு வழங்கி மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அவமதிக்காதீர்கள்
மம்தா பானர்ஜி கூறுகையில், ‘‘மத்திய பாஜ அரசு தொடர்ந்து பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டு வருகிறது. தலைமை செயலாளரை மத்திய அரசு பணிக்கு நியமனம் செய்ததை திரும்ப பெற வேண்டும்.  மாநில வளர்ச்சிக்காக மோடியின் காலை கூட தொட்டு கேட்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் என்னை அவமானப்படுத்தாதீர்கள். புயல் பாதிப்பு ஆய்வு கூட்டம் என்பது பிரதமர், முதல்வர் இடையே நடைபெற வேண்டியது. இதில், எதற்கு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு (பாஜ) அழைப்பு விடுவிக்கப்பட்டது. ஆனால், புயல் பாதித்த ஒடிசா மற்றும் குஜராத்தில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுவிக்கப்படவில்லை’’ என்றார்.

மதிக்காத மம்தா
கடந்த ஆண்டு மத்திய அரசு பணிக்கு மேற்கு வங்கத்தில் பணியாற்றி வந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு நியமனம் செய்தது. ஆனால், மேற்கு வங்க அரசு 3 அதிகாரிகளையும் விடுவிக்க மறுத்தது. இதனால், 3 பேர் அதிகாரிகளும் மேற்கு வங்கத்தில்தான் பணியாற்றி வருகின்றனர். இதனால், தற்போது தலைமை செயலாளரையும் மத்திய அரசு பணிக்கு மேற்கு வங்க அரசு விடுவிக்குமா என்பது கேள்வி எழுந்துள்ளது.

Tags : West Bengal ,Chief Secretary ,Mamata ,PM ,Modi , West Bengal Chief Secretary shifts to central government job as Mamata boycotts PM Modi's review meeting
× RELATED மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து சிறுவன் உயிரிழப்பு..!!