×

நடிகை சாந்தினி பாலியல் புகார் எதிரொலி: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைதாவாரா? சட்ட வல்லுநர்களுடன் போலீசார் ஆலோசனை

சென்னை: நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகார் எதிரொலியாக மாஜி அமைச்சர் மணிகண்டன் மீதான குற்றச்சாட்டு குறித்து சட்ட வல்லுநர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. நாடோடிகள் படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் சாந்தினி. இவர், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை சந்தித்து பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், ‘நான் மிகவும் அழகாக இருப்பதாகவும், அவருக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டதாகவும், ஒரு கட்டத்தில் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும். குடும்ப வாழ்வில் அவர் மனைவியால் எந்த சந்தோஷமும் இல்லை என்றும் அவருடைய மனைவி மிகவும் கொடுமைக்காரி என்றும், என்னை போன்ற ஒரு அழகான பெண் இல்லற வாழ்வில் இருந்தால் என்னுடைய வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கும்’ என்று கூறி என்னை மயக்கிவிட்டார்.

நாளடைவில் அவரை முறைப்படி திருமணம் செய்ய வற்புறத்தியபோது அவர், அவருடைய மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டு என்னை திருமணம் செய்வதாக கூறுவார். நாங்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்ததன் பலனாக நான் 3 முறை கருவுற்றேன். நான் கருவுற்ற 3 முறையும் நான் உன்னை முறைப்படி திருமணம் செய்து கொண்ட பிறகு நாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று என்னை மூளை சலவை செய்து 3 முறையும் அவரது நண்பரான டாக்டர் அருண், கோபாலபுரத்தில் நடத்தி வரும் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்தார்.கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி வரை என்னுடன் வாழ்ந்து வந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சொந்த ஊருக்கு ெசன்ற பிறகு என்னை திடீரென்று மிரட்ட ஆரம்பித்தார். நான் அவரிடம் கேட்ட போது நீ உன் சொந்த நாட்டிற்கு சென்று விடு இல்லை என்றால் உனக்கு தெரியாமல் எடுத்த நிர்வாண படங்களையும் சமூக வலைதளம் மற்றும் இண்டர்நெட்டில் விட்டுவிடுவேன் என்று மிரட்டினார். நான் குளிக்கும் சமயம் எனக்கு தெரியாமல் எடுத்த ஆடையில்லாத போட்டோவை எனக்கு டெலகிராம் மூலம் அனுப்பினார்.

என் மீது மோசடி வழக்கு பதிவு செய்வதாகவும், தெரிந்த ரவுடிகளை வைத்து என்னை கொலை செய்து விடுவதாகவும் எனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார் இவ்வாறு அந்த புகார் மனுவில் நடிகை சாந்தினி தெரிவித்துள்ளார். இந்தப் புகார் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணைக்கு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து துணை கமிஷனர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல் கட்டமாக சட்ட வல்லுநர்களுடன் தனிப்படையினர் ஆலோசனையை தொடங்கியுள்ளனர். இதனால் ஓரிரு நாளில் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் ஒருவர் பாலியல் புகாரில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொது நிகழ்ச்சியில் மணிகண்டன்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி புகார் கொடுத்த பிறகு, அவர் முன்னாள் அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், உதயகுமார் ஆகியோருடன் பொது நிகழ்ச்சியில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் நேற்று வரிசையாக சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

Tags : Chandini ,AIADMK ,minister ,Manikandan , Actress Chandini sexual harassment echo: Will AIADMK ex-minister Manikandan be arrested? Police consultation with legal experts
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...