சென்னை: அமெரிக்க இந்திய நட்பு கூட்டணி சார்பில் தமிழகத்திற்கு 486 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இவை ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் தொழில்துறை மூலம், அமெரிக்க இந்திய தொழில் உத்தி கூட்டாண்மை மன்றத்தை சார்ந்த அமைப்பான அமெரிக்க இந்திய நட்பு கூட்டணி சார்பில் 486 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தமிழ்நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இவை, சீனாவில் உள்ள போஷன் நகரில் இருந்து, வான்வழியாக டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் சரக்கு விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு தலா 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வீதம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. மீதமுள்ள 336 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள், மேற்கூறிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கோவிட் நிவாரண மையங்களில் பயன்படுத்தப்படும். அமெரிக்க இந்திய தொழில் உத்தி கூட்டாண்மை மன்றத்தின் இந்த உதவிக்கு, தமிழக அரசு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.