×

பத்மா சேஷாத்திரி பள்ளியை தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மகரிஷி வித்யாமந்திர் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்: சமூகம் சார்ந்த பிரச்னை என்பதால் போலீஸ் தானாக விசாரணையை தொடங்கியது

சென்னை: பத்மா சேஷாத்திரி பள்ளியை தொடர்ந்து மற்றொரு பள்ளியான மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் படித்து வந்த மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் ஆசிரியர் ஆனந்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை கே.ேக.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சம்பவமான சென்னை அயனாவரத்தில் உள்ள பிரபல மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் படித்து வரும் மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள் டிவிட்டர் மற்றும் சமூக வலைத்தளங்களில் எங்கள் பள்ளியிலும் பணியாற்றி வரும் ஆசிரியர் ஆனந்த் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், இதுகுறித்து நாங்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் ஆசிரியரின் புகைப்படத்துடன் பதிவு செய்து இருந்தனர். பள்ளியில் நடைபெறும் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளிக்காமல் தங்களது பாதிப்பை  சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  இது, சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிலைமை கைமீறி சென்றதால் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் மீதான புகாரை விசாரணை நடத்த முன்னாள் மாணவர்கள் அடங்கிய விசாரணைக்குழுவை அமைத்தது. அந்த விசாரணைக்குழுவினர் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர் ஆனந்திடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து விசாரணை குழு தனது அறிக்கையை பள்ளி நிர்வாகத்திடம் அளித்தனர். அதன்படி பள்ளி நிர்வாகம், மாணவிகளுக்கு தொடர் பாலியல்  தொந்தரவு கொடுத்து வந்த வணிகவியல் முதுநிலை பட்டதாரியான ஆனந்தை நேற்று அதிரடியாக பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

ஆனால், ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய மாணவிகள் யாரும் காவல் துறையில் இதுவரை புகார் அளிக்கவில்லை. அதேபோல் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி சார்பிலும் காவல் துறைக்கு புகார் அளிக்கப்படவில்லை. இதற்கிடையே மாணவிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டு சமூக வலைத்தளங்களில் அசுர வேகத்தில் பரவியதால் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி தானாக முன் வந்து வழக்கு விசாரணையை தொடங்கி உள்ளார். முதற்கட்டமாக அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சமூக வலைத்தளங்களில் அளித்த பதிவை புகாராக எடுத்து அயனாவரத்தில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர் ஆனந்திடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில்,  ஆசிரியர் ஆனந்த் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததற்கான முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளது. அதேநேரம், ஆசிரியர் ஆனந்த் மாணவிகளை தொட்டுதொட்டுத்தான் பேசுவார் என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் ஆசிரியர் ஆனந்திற்கு எதிரான பள்ளி நிர்வாகம் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் புகார் பெற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி புகார் பெறப்பட்ட அடுத்த நிமிடமே பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர் ஆனந்த் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

‘மை டியர் மகளே’
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் தன் மீது சுமத்தப்பட்டுள்ள புகாரை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “நான் எல்லா மாணவிகளையும் மை டியர் மகளே! என்றுதான் அழைப்பேன். வகுப்பில் கொஞ்சம் ஸ்டிரிக்ட் ஆக இருப்பேன். இதை பிடிக்காத சிலர் வேண்டுமென்றே என் மீது புகாரளித்துள்ளனர். நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று மறுத்துள்ளார்.

Tags : Maharishi ,Vidyamandir ,Padma Seshadri School , Maharishi Vidyamandir school teacher suspended for sexually harassing students following Padma Seshadri school: Police launch auto investigation
× RELATED வரலட்சுமியின் பான் இந்தியா படம் மே 3ம் தேதி ரிலீஸ்