×

விஸ்வரூபம் எடுக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவிகளிடம் ரகசிய விசாரணை தொடங்கியது

* பெரிய நடிகையாக வருவாய் என கூறி ஆபாச படங்களை ஆசிரியர்கள் பெற்றதாக குற்றச்சாட்டு
* வெளியில் சொன்னால் டிஸ்மிஸ் செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்ததும் அம்பலம்

சென்னை: பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் ஆசிரியர் தங்களை பெரிய நடிகையாக வருவாய் என கூறி ஆபாச படங்களை பெற்று, சக ஆசிரியர்களுடன் சேர்ந்து பலவகையில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியின் ஆன்லைன் வகுப்பில் அரை நிர்வாணமாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் அப்பள்ளியின் வணிகவியல் துறை ஆசிரியர் ராஜகோபாலனை அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கடந்த 25ம் தேதி அதிகாலை கைது செய்தனர்.

விசாரணையின் போது அசிரியர் ராஜகோபாலன் தன்னை போன்று எங்கள் பள்ளியில் பணியாற்றி வரும் சக ஆசிரியர்கள் 3 பேர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். நான் மட்டும் இந்த வழக்கில் சிக்கி கொண்டேன் என்று கூறியுள்ளார். அதற்கான ஆதாரங்களையும் ஆசிரியர் தனது லேப்டாப்பில் மாணவிகளுடன் சக ஆசிரியர்கள் இருப்பது போன்ற படங்களையும் அவர் வைத்திருந்தார். அதன்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வாட்ஸ் அப் பதிவு கொண்ட புகார் எண் அறிவித்து ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளிக்கலாம்  என்றும், அந்த புகார்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவித்தனர். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் இருந்து பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர்கள் மீது 30க்கும் மேற்பட்ட முன்னாள் மற்றும் தற்போது படித்து வரும் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

அப்படி புகார் அளித்த 30 மாணவிகள், தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை நேரடியாக போலீசாரிடம் தெரிவிக்க 2 மாணவிகள் முன் வந்தனர். மகளிர் போலீசார் உறவினர்கள் போல் சாதாரண உடையில் ரகசியமாக அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று விசாரணை நடத்தினர். அதில் பாதிக்கப்பட்ட மாணவிகள் கண்ணீர் மல்க ஆசிரியர்கள் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளனர். மாணவிகள் அளித்த பதிலை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.
மாணவிகளிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:

‘‘ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த 10 ஆண்டுகளாகவே பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்து வந்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது. பள்ளியில் ராஜகோபாலன் மூத்த ஆசிரியர் என்பதால் அவரை பார்த்தால் முதல்வர் கீதாவே வணக்கம் வைத்து விட்டு செல்வார். பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் இவர் சொல்வதை தான் கேட்பார்கள். இதனால் மாணவர்கள் மத்தியில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது சற்று அச்சம் இருக்கும். மூத்த ஆசிரியர் என்பதால் அவர் அனைத்து வகுப்பு மாணவிகளிடம் பேசி பழகுவார். அப்படி பழகும் போது, மாணவிகளிடம் உங்கள் பெற்றோர் என்ன செய்கிறார்கள். உங்களுக்கு வீட்டில் தனி அறை உண்டா என்று பல தனிப்பட்ட கேள்விகளை கேட்பார். எங்களை போன்ற மாணவிகள் ஆசிரியர் தான் கேட்கிறார் என்று அனைத்து உண்மைகளையும் சொல்வோம்.

பிறகு மறு நாள் பள்ளி உணவு இடைவேளை மற்றும் பள்ளி முடிந்து காருக்காக நாங்கள் காத்து கொண்டு இருக்கும் போது எங்களிடம் செல்போன் எண்ணை வாங்கி கொள்வார். முதல் நாள் வாட்ஸ் அப் மூலம் ‘குட் நைட்’ அனுப்புவார். நாங்களும் ஆசிரியர் எனக்கு குட்நைட் அனுப்பி உள்ளாரே என்று மகிழ்ச்சியில் மெசேஜ் அனுப்புவோம். அப்போது அவர், நீ பள்ளியில் முதல் மதிப்பெண் எடுக்க அனைத்து உதவிகளையும் செய்வதாகவும், நான் உதவி செய்வதை நீ யாரிடமும் சொல்ல கூடாது என்று மெசேஜ் அனுப்புவார். நாங்களும் அதன்படி ஆசிரியர் அனுப்பும் மெசேஜ் தொடர்பாக யாரிடமும் சொல்ல மாட்டோம் சார் என்று அனுப்புவோம்.

இதை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு இரவு 10 மணிக்கு மேல் எங்கள் வாட்ஸ் அப் எண்ணிற்கு ‘இன்று நீ அழகாக இருந்தாய்’ என்று மெசேஜ் அனுப்புவார். அதற்கு நாங்கள் பதில் அளித்த உடன், எங்களை உடல் ரீதியாக நீ இப்படி இருக்கிறாய். நீ பெரிய நடிகையாக வருவாய். நம்ம பள்ளி நடத்துபவர்கள் பெரிய நடிகர்கள். இதனால் நான் அவர்களிடம் கூறி உன்னை பெரிய நடிகையாக வர வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று கூறுவார். பிறகு மறுநாள் மெசேஜ் அனுப்பிய மாணவிகளை நேரில் சந்தித்து பேசுவார். அதைதொடர்ந்து அன்று இரவு நடிகையாக வரவேண்டும் என்றால் ‘மாடலிங் போன்று புகைப்படங்கள் தேவைப்படுகிறது. இதனால் நீங்கள் குளித்த பிறகு யார் உதவியும் இன்றி நீங்களே உங்கள் அறையில் உள்ள கண்ணாடி முன்பு நின்று புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் அதை பார்த்து நான் தேர்வு செய்து கொள்கிறேன் என்று கூறுவார்.

அதன்படி நாங்களும் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் பல கோணங்களில் நிர்வாண புகைப்படங்களை அனுப்பி உள்ளோம். அந்த புகைப்படத்தை பார்த்து எங்களை சிறப்பு வகுப்பு என்று பள்ளி விடுமுறை நாட்களில் வரவழைத்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பார். இதை மறுக்கும் மாணவிகளை அவர்கள் அனுப்பிய ஆபாச புகைப்படங்களை அவர்களிடமே காட்டி பள்ளியில் இருந்து நீக்கி விடுவதாக கூறி தொந்தரவு கொடுத்து வந்தார். அதோடு இல்லாமல் சக ஆசிரியர்களான அவரது நண்பர்கள் 3 பேருக்கும் எங்களின் ஆபாச புகைப்படங்களை அனுப்புவார். அவர்கள் திடீரென எங்களிடம் வந்து உனது படங்களை நாங்கள் பார்த்தோம். நன்றாக இருந்தது என்று கூறி அவர்களும் தொந்தரவு செய்வார்கள்.

இதுபோன்ற நாட்களில் நாங்கள் ஆசிரியர்களிடம் இருந்து தப்பிக்க வீட்டில் பெற்றோரிடம் உடம்பு சரியில்லை என்று கூறி பல முறை பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து இருக்கிறோம். நாங்கள் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்து 7 ஆண்டுகள் ஆகிறது. இருந்தாலும் எங்களுக்கு ஆசிரியர்கள் கொடுத்த பாலியல் தொந்தரவு எங்களால் மறக்க முடியவில்லை. இதனால் நாங்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளோம். பல நாள் திருடன் ஒரு நாள் கண்டிப்பாக மாட்டி கொள்வான் என்று சொல்வார்கள் அதை போல் இன்று, பல நாட்கள் எங்களை போன்ற மாணவிகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்த ஆசிரியர் போலீசாரிடம் மாட்டியுள்ளார். ராஜகோபாலனுடன் மாணவிகளுக்கு  தொந்தரவு கொடுத்து வந்த 3 ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’. இவ்வாறு முன்னாள் மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.


ஆசிரியர் ராஜகோபாலன்,
இரவு 10 மணிக்கு மேல் எங்கள் வாட்ஸ் அப் எண்ணிற்கு ‘இன்று நீ அழகாக இருந்தாய்’ என்று மெசேஜ் அனுப்புவார். அதற்கு நாங்கள் பதில் அளித்த உடன், எங்களை உடல்ரீதியாக நீ இப்படி இருக்கிறாய். நீ பெரிய  நடிகையாக வருவாய். நம்ம பள்ளி நடத்துபவர்கள் பெரிய நடிகர்கள். இதனால் நான்  அவர்களிடம் கூறி உன்னை பெரிய நடிகையாக வர வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று கூறுவார்”

பள்ளி முதல்வர் மிரட்டல்
ஒரு கட்டத்தில் ஆசிரியர் ராஜகோபாலன் விடுமுறையில் இருந்தார். அன்று நாங்கள், பள்ளி முதல்வரிடம் ஆசிரியரின் தொந்தரவு குறித்து புகார்  அளித்தோம். அப்போது அவர், உங்கள் ஆசிரியர், உங்கள் அப்பா வயது இப்படி  வெளியில் சொல்லாதீர்கள். வெளியில் நீங்கள் சொன்னால் உங்களை பள்ளியை வீட்டு டிஸ்மிஸ் செய்துவிடுவோம். அதோடு நீங்கள் எந்த பள்ளியிலும் படிக்க  முடியாது. நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று  நினைக்கிறேன். ஒழுங்காக படித்துவிட்டு நல்ல மாணவிகளாக வெளியே செல்லுங்கள் என்று கூறினார். இதனால் நாங்கள் பள்ளியில் படிக்கும் போது எங்களால் ஆசிரியரின் பாலியல் தொந்தரவு குறித்து வெளியில் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

Tags : Padma Seshadri School , The issue of sexual harassment of students taking Vishwaroopam To Padma Seshadri School students The undercover investigation began
× RELATED சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர்...