எம்டெக் பயோ டெக்னாலஜி, கம்ப்யூடேஷனல் பாயாலஜி படிப்பு மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரி வழக்கு: ஏஐசிடிஇ, அண்ணா பல்கலை. பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை, மே 27: அண்ணா பல்கலைக்கழகத்தில் இரு எம்.டெக். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் நிதியுதவியுடன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். பயோ டெக்னாலஜி மற்றும் கம்ப்யூடேஷனல் பயாலஜி ஆகிய இரு படிப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் மாணவர் சேர்க்கையின் போது தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றக் கூடாது எனவும், மத்திய அரசின் 49.5 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு வற்புறுத்தியது.

இதனால், 2020-21ம் கல்வியாண்டில் இந்த இரு எம்.டெக் படிப்புகளையும் ரத்து செய்து அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதனால், 45 மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சிபெற்ற மாணவ, மாணவிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டது. அதேபோல, மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், 45 இடங்களைக் கொண்ட இந்த இரு படிப்புகளுக்கும் சேர்த்து 12 பேருக்கு மட்டும் சேர்க்கை வழங்கப்பட்டுள்ளதாக கூறி குழலி என்ற மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், மீதமுள்ள 33 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை பட்டியலை வெளியிடக் கோரி அனுப்பிய மனுவுக்கு பதிலளித்த மத்திய அரசு, மார்ச் 20ம் தேதி வரை மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்தது.

இதனால், மாணவர் சேர்க்கை நடத்தப்படாமல் காலியாக உள்ள 33 இடங்களுக்கும் சேர்க்கை நடத்தும் வகையில் காலக்கெடுவை நீட்டிக்குமாறு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மனுவுக்கு ஜூன் 1ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Related Stories: