×

சிப்காட் மூலம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள், கருவிகள் 18 மாவட்டத்துக்கு லாரிகளில் சென்றது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

சென்னை: சிப்காட் நிறுவனம் மூலம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கருவிகளை 18 மாவட்டங்களுக்கு கொரோனா சிகிச்சை பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தார். கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலின் 2வது அலை காரணமாக, ஆக்சிஜன் மற்றும் அதன் தொடர்புடைய சாதனங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.  இவற்றின் அவசர தேவையை கருதி,  முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தால் (சிப்காட்) போதிய அளவிற்கான ஆக்சிஜன் சாதனங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி சிப்காட் நிறுவனம், சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் துபாயில் இருந்து 1,915 ஆக்சிஜன் உருளைகள், 2,380 ஆக்சிஜன் முறைப்படுத்தும் கருவிகளையும்,  3,250 ஓட்ட அளவு உருளைகளையும், 5,000 ஆக்சிஜன் செறிவூட்டிகளையும், 800 ஆக்சிஜன் நிரப்பட்ட உருளைகளை என மொத்தம் ₹40.71 கோடி அளவிற்கு இறக்குமதி செய்ய ஆணைகள்  அளித்துள்ளது. இதுவரை, இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட ஆணைகளில், 1,400 ஆக்சிஜன் உருளைகள் சிங்கப்பூரில் இருந்து, விசாகப்பட்டினத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள, 1400 ஆக்சிஜன் உருளைகள் மற்றும் முறைப்படுத்தும் கருவிகளை கரூர் மாவட்டத்திற்கு 75, தர்மபுரி 75, நீலகிரி 75, சிவகங்கை 100, நாமக்கல் 75, நாகப்பட்டினம் 75, திருவாரூர் 75, தேனி 75, திண்டுக்கல் 75, கன்னியாகுமரி 75, ராமநாதபுரம் 75, விருதுநகர் 75, திருப்பத்தூர்  75, கள்ளக்குறிச்சி 75, திருவண்ணாமலை 100, கடலூர் 100, விழுப்புரம் 75, ராணிப்பேட்டை 50 என மொத்தம் 1400  ஆக்சிஜன் உருளைகள் மற்றும் முறைப்படுத்தும் கருவிகளை கொரோனா சிகிச்சை பயன்பாட்டிற்காக வாகனங்கள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,  ஊரக தொழிற் துறை அமைச்சர்  தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்பி, தலைமை செயலாளர் இறையன்பு, தொழில் துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், தொழில் துறை சிறப்பு செயலாளர் அருண் ராய்,  சிப்காட் மேலாண்மை இயக்குநர் குமரகுருபரன் ஆகியோர் உடனிருந்தனர்.



Tags : Chipkot ,MK Stalin , Imported from overseas by chipcode 1,400 oxygen cylinders, equipment went by truck to 18 districts: Chief Minister MK Stalin flags off
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...