மேலூர்: மேலூர் அருகே தாய், தங்கையை, காதலன் மூலம் அக்காவே வெட்டிக் கொலை செய்ய ஏற்பாடு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழபதினெட்டாங்குடியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி நீலாதேவி (47). மகள்கள் மகேஸ்வரி(25), அகிலாண்டேஸ்வரி(22). மகேஸ்வரி திருமணமாகி மேலூர் அருகே தெற்குப்பட்டியில் வசித்து வந்தார். 2வது மகள் அகிலாண்டேஸ்வரி விவாகரத்தாகி தாயுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் முத்துகிருஷ்ணன் இரவு காவல் வேலைக்கு சென்று விட, தாய் நீலாதேவி மற்றும் மகள் அகிலாண்டேஸ்வரி மட்டும் வீட்டில் தூங்கி உள்ளனர்.
நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் இருவரையும் அரிவாளால் 15க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பினர். நேற்று காலை வீடு திரும்பிய முத்துகிருஷ்ணன் மனைவி, மகள் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மதுரை எஸ்பி சுஜித்குமார் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணை நடத்திய போலீசார் கூறியதாவது: நீலாதேவியின் மூத்த மகளான மகேஸ்வரிக்கும், மேலூர் பகுதியை சேர்ந்த சசிக்குமாருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை தாய் நீலாதேவி, தங்கை அகிலாண்டேஸ்வரி கண்டித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மகேஸ்வரி தனது கள்ளக்காதலன் சசிக்குமார் மூலம் அவர்களை வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து மேலூர் போலீசார், மகேஸ்வரியை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரிக்கின்றனர். இவரின் காதலன் சசிகுமாரை, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் சசிகுமாரோடு, வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனரா எனவும் விசாரித்து வருகின்றனர்.