×

ஒடிசா - மேற்கு வங்கம் இடையே இன்று கரையை கடக்கும் யாஸ் புயல்: 11 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

புவனேஸ்வர்: ஒடிசா - மேற்கு வங்கம் இடையே ‘யாஸ்’ புயல் இன்று கரையை கடக்கிறது. இதனால், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்த 11 லட்சம் பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  கிழக்கு மத்திய வங்ககடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் புயலாக மாறியது. ‘யாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் நேற்று காலை தீவிர புயலானது. இந்த புயல் இன்று காலை ஒடிசா மாநிலம், பாட்ராக் மாவட்டத்தில் உள்ள தர்மா துறைமுகம் இடையே அருகே கரையை எட்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிற்பகலில் ஒடிசாவின் பாலசோர் மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது அதி கனமழையுடன் 185 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும், பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் முன்னெச்சரிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளன.

புயல் நெருங்கி வருவதால் ஒடிசா மாநில கேந்திராபாரா, ஜகத்சிங்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள சந்த்பாலி மாவட்டத்தில் மரங்கள், டிரான்ஸ்பார்மர் அதிகளவில் சாய்ந்து சேதமடையும் என்றும், அதிக பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநில முதல்வர் நவீன் பட்நாயக், உள்துறை அமைச்சர் டி.எஸ்.மிஸ்ராவை பாலாஷோருக்கு அனுப்பி வைத்து வடக்கு பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். புயல் நெருங்க நெருங்க மழை தீவிரமாக என்பதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள், முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை கடலோர மாவட்டங்கள் மற்றும் தாழ்வனா பகுதிகளில் வசித்த வந்த 2.10 லட்சம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவில் ஜூன் 1ம் தேதி பிரசவிக்க உள்ள 5000 கர்ப்பிணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புயல் பாதிக்க கூடிய பகுதிகளில் மின்சாரத்தை சரி செய்ய 10,000 மின் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி 74,000 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், 2 லட்சம் போலீசார் புயல் பணிக்காக நியமித்துள்ளார். மேற்கு வங்கத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 9 லட்சம் பேர் மீட்கப்பட்டு, 4000 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. புயல் பாதிக்ககூடிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு தடைப்படாமல் மின்சாரம், ஆக்சிஜன் மற்றும் மருத்துவ பொருட்கள் கிடைப்பதற்கு மாற்று வழி செய்யப்பட்டுள்ளது. புயல் காரணமாக ஜார்கண்ட் மாநிலத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் தேசிய பேரிடர் மீட்பு மற்றும் மாநில  பேரிடர் மீட்பு குழுக்கள் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு தயார்  நிலையில் உள்ளனர். இந்திய விமானப்படை, 15 விமானங்களில் 950 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவுக்கு அனுப்பட்டுள்ளனர். 16 விமானங்களும், 26 ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் உள்ளன. கிழக்கு கடற்படை மற்ரும் அந்தமான் நிக்கோபார் கடற்படையை சேர்ந்த 8 கப்பல்கள், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக தயார் நிலையில் வைக்க்கப்பட்டுள்ளன.

112 தேசிய பேரிடர் குழு
தேசிய பேரிடர் மீட்பு குழு மூத்த அதிகாரி கூறுகையில், ‘யாஸ்’ புயலை எதிர்க்கொள்ள 112 தேசிய பேரிடர் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத வகையில் ஒடிசா 52 குழுக்களும் மற்றும் மேற்கு வங்கத்திற்கு 45 குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குழுக்கள் ஆந்திரா, தமிழ்நாடு, ஜார்கண்ட், அந்தமான் நிக்கோபார் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 50க்கும் மேற்பட்ட குழுக்கள் தயார் நிலையில் பல்வேறு பகுதிகளில் தயார் நிலையில் உள்ளனர். தேவைக்கு ஏற்ப அந்தந்த பகுதிகளில் உடனடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள்’ என்றார்.

Tags : Yas ,Odisha ,West Bengal , Yas storm crosses Odisha-West Bengal border today: 11 lakh evacuated
× RELATED வசமாக சிக்கியவர்களே அமலாக்கத்துறை,...