×

பள்ளி, உயர்க்கல்வி, உள்ளாட்சி, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 21 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு

சென்னை: தமிழக அரசில் உள்ளாட்சி, பள்ளி, உயர்கல்வி, பொதுப்பணித்துறை, வணிகவரித்துறை செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளின் 21 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட உத்தரவு:  கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலாளர் கே.கோபால் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்துறையின் முதன்மை செயலாளராக மாற்றப்படுகிறார். இந்தப் பதவி வகித்த ஹன்ஸ்ராஜ் வர்மா மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு புதிய பணியிடம் வழங்கப்படவில்லை. இன்ட்கோசர் தலைமைச் செயல் அதிகாரி சுப்ரியா சாகு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் இருந்த சந்தீப் சக்சேனா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர், ஜோதி நிர்மலா சாமி வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அந்தப் பதவி வகித் பீலா ராஜேஷ், மாற்றப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்த தீரஜ் குமார், உயர் கல்வித்துறை முதன்மை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக(டிட்கோ) மேலாண்மை இயக்குனர் ககர்லா உஷா, பள்ளிக் கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்படுகிறார். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளார் சந்திப் சக்‌ஷேனா பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்படுகிறார். இந்தப் பதவியில் இருந்த மணிவாசன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கருவூலம் மற்றும் கணக்குகள் துறையின் ஆணையர் குமார் ஜெயந்த், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளராக நியமிக்கப்படுகிறார். இந்தப் பதவியில் இருந்த அதுல்யா மிஸ்ரா மாற்றப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல ஆணையர் ஹிதேஷ் குமார் மக்வானா வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இந்த துறையின் முதன்மை செயலாளர் கார்த்திகேயன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்படுகிறார். போக்குவரத்துறை துறை செயலாளராக இருந்த சமயமூர்த்தி, வேளான்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளராக நியமிக்கப்படுகிறார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை  முதன்மை செயலாளர் சந்திர மோகன், சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்படுகிறார். இந்தப் பதவி வகித்து வந்த விக்ரம் கபூர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் பதவி வகித்து வந்த முகமது நசீமுதீன், மாற்றப்பட்டுள்ளார். தொழில்துறை சிறப்பு செயலாளர் அருண் ராய் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலாளராக நியமிக்கப்படுகிறார். அந்தப் பதவி வகித்து வந்த மங்கத்ராம் சர்மா மாற்றப்பட்டுள்ளார்.

கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா, கைத்தறி மற்றும் துணிநூல் துறை முதன்மை செயலாளராக மாற்றப்படுகிறார். பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவாசன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் கார்த்திக் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளராக மாற்றப்படுகிறார். வெளிநாட்டு மனிதவள கழக தலைவராக இருந்த தர்மேந்திர பிரதாப் யாதவ், எரிசக்தித்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இந்தப் பதவியை எஸ்.கே.பிரபாகர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.

கோ-ஆப் டெக்ஸ் நிர்வாக இயக்குனர் மைதிலி கே. ராஜேந்திரன், பணியாளர் நலன், நிர்வாக சீர்திருத்தங்கள் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இந்தப் பதவி வகித்த எஸ்.சொர்ணா மாற்றப்பட்டுள்ளார். கைத்தறி மற்றும் துணிநூல் நூர்ப்பு துறை முதன்மை செயலாளர் சாம்பூ கல்லோலிகர் சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்படுகிறார். இந்தப் பதவி வகித்த மதுமதி, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சமூக பாதுகாப்பு ஆணையர் லல்வீனா மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நியமிக்கப்படுகிறார். இந்தப் பதவி வகித்து வந்த விஜயராஜ்குமார் மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. திமுக அரசு அமைந்த பிறகு, முதல் முறையாக முக்கியத்துறைகளின் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : 21 IAS officers transferred, including in schools, higher education, local government and public works: Tamil Nadu government orders action
× RELATED பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரேபரேலி...