×

காவிரியில் மேகதாதுவின் குறுக்கே கர்நாடக அரசு அனுமதியின்றி அணை கட்டுகிறதா?: மத்திய அரசு, கர்நாடகம், தமிழக அரசுகள் பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..!!

டெல்லி: காவிரியில் மேகதாதுவின் குறுக்கே கர்நாடக அரசு அனுமதியின்றி அணை கட்டுகிறதா என்று தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. கர்நாடக மாநிலம் மேகதாது அருகே பெங்களூரு நகரத்தில் குடிநீர் சப்ளை செய்வதற்கு ஏதுவாக 9,000 கோடி ரூபாய் செலவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு மேற்கொண்டது. இந்த அணையில் இருந்து 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யவும் இத்திட்டம் செயல்படவிருக்கிறது. இந்த அணை கட்டுவதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது. 


இந்த நிலையில், மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் இன்றி வனப்பாதுகாப்பு சட்டம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பின் படி, எந்தவொரு அனுமதியும் பெறாத நிலையில், மேகதாதுவில் அணை  கட்டுமானத்துக்கான பொருட்களை குவிப்பதாக பத்திரிகையில் செய்தி வெளியானது. அதில், அணை கட்டுவதால் 5,252 ஹெக்டர் வனப்பகுதி தண்ணீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும், வன விலங்கு சரணாலயத்திற்கு பாதிப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தியை அடுத்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. 


அந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்ய கோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசும், கர்நாடக அரசும் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். மேலும் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது பகுதியில் அணை கட்டும் பணிகள் நடைபெறுகிறதா? என்பதையும் அணை கட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைகளின் மூத்த அதிகாரி, காவிரி நீர் மேலாண்மை மூத்த அதிகாரி அடங்கிய குழுவை நியமித்து  உத்தரவிட்டிருக்கிறார். இந்த குழு வருகின்ற ஜூலை மாதம் 5ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருக்கிறது. 



Tags : Government of Karnataka ,Meghatu ,Gavriri ,National ,Tribunal ,Governments of Karnada ,Tamil Government , Cauvery, Megha Dadu Dam, Central Government, Karnataka, Government of Tamil Nadu, Green Tribunal
× RELATED கர்நாடக அரசு சார்பில் நடத்தி...