×

உற்பத்தி-விநியோகம் இடையே மாறுபடும் எண்ணிக்கை தினசரி 10 லட்சம் தடுப்பூசி மாயம்?: எங்கே கோல்மால் நடக்குது

புதுடெல்லி: மத்திய அரசு கூறும் கொரோனா தடுப்பூசி உற்பத்தி எண்ணிக்கைக்கும், தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள்  எண்ணிக்கைக்கும் இடையே மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி தினசரி 10 லட்சம் டோஸ் தடுப்பூசி எங்கே போகிறது என்பது  விடைதெரியாத கேள்வியாக உள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மத்திய அரசு போதிய அளவுக்கு தடுப்பூசி விநியோகிப்பதில்லை என  மாநில அரசுகள் குற்றம்சாட்டுகின்றன.

தற்போது, கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. ரஷ்யாவின்  ஸ்புட்னிக் தடுப்பூசி இன்னும்  முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்தியாவில் ஒரு மாதத்திற்கு கோவிஷீல்டு தடுப்பூசி 6 கோடியும், கோவாக்சின்  2 கோடியும்  உற்பத்தி செய்யப்படுவதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறி உள்ளது. இதை கோவிஷீல்டை உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனமும்,  கோவாக்சினை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ளன.

மே மாதத்தில் இந்தியாவில் மொத்தம் 8 கோடி டோஸ் தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறி உள்ளது. அதாவது  சராசரியாக ஒரு நாளைக்கு 27.4 லட்சம் டோஸ் ஆகும். ஆனால்  கோவின் இணையத்தில் உள்ள புள்ளிவிவரங்களின்படி மே மாதத்தின்  முதல் 22 நாட்களில் நாடு முழுவதும் சராசரியாக ஒருநாளுக்கு 16.2 லட்சம் என்ற அளவில் மொத்தம் 3.6 கோடி பேருக்கு தடுப்பூசி  போடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் இந்த மாதத்தில் அதிகபட்சம் 5 கோடி டோஸ் என்ற அளவில் மட்டுமே தடுப்பூசி வழங்கப்படும்.

குறிப்பாக, கடந்த 7 நாட்களில் தடுப்பூசி போடும் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை  சராசரியாக தினசரி 13 லட்சத்துக்கும் குறைவானவர்களுக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அப்படியெனில், மாதத்திற்கு 8 கோடி தடுப்பூசி  தயாரிப்பாக மத்திய அரசு கூறும் நிலையில், வெறும் 5 கோடி தடுப்பூசி மட்டுமே போடப்படுகிறது. அப்படியெனில் தினசரி 10 லட்சம்  தடுப்பூசி எங்கே போகிறது என்பது விடைதெரியாத கேள்வியாக உள்ளது. தடுப்பூசி இல்லாததால் பல மாநிலங்கள் தடுப்பூசி போடும் பணியை தற்காலிகமாக நிறுத்தி உள்ளன. இப்படிப்பட்ட நிலையில் உற்பத்தி  செய்யப்படும் 10 லட்சம் தடுப்பூசிகள் எங்கே?  தடுப்பூசி உற்பத்தி செய்பவரிகளிடம் இருந்து தடுப்பூசி போட முயற்சிக்கும் மக்களுக்குமான  இடைவெளி எப்படி மாறுகிறது?  என்பது புரியாத புதிராக இருக்கின்றது.

கண்டுகொள்ளாத மத்திய அரசு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘தொற்று நோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய ஆயுதமே  தடுப்பூசி தான். ஆனால் அதைப் பற்றி மத்திய அரசு சற்றும் கண்டுகொள்ளவில்லை’’ என விமர்சித்துள்ளார். மேலும், தடுப்பூசி உற்பத்தி  குறைந்துள்ளது குறித்த வரைபடம் ஒன்றையும் இணைத்துள்ளார். அதில் கடந்த ஏப்ரலில் இந்தியாவில் 8.98 கோடி பேருக்கு தடுப்பூசி  போடப்பட்டுள்ளதாகவும், மே மாதத்தில் 3.69 கோடியாக அது குறைந்துள்ளது எனவும், ஒருநாளைக்கு சராசரியாக 29.95 லட்சம் தடுப்பூசி  போடப்பட்டு வந்த நிலையில் தற்போது அது 18.44 லட்சமாக சரிந்துள்ளது என்றும் காட்டப்பட்டுள்ளது.



Tags : Golmaal , The number that varies between production and distribution is 10 lakh vaccine magic per day?
× RELATED உபி.யில் சத்துணவு திட்டத்தில்...