போலீஸ் உடையில் லாரி டிரைவர்களை குறிவைத்த கும்பல்: இரட்டை கொலை வழக்கில் 11 பேருக்கு தூக்கு: 7 பேருக்கு ஆயுள் தண்டனை

திருமலை: ஆந்திராவில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனரை தாக்கி கொலை செய்து லாரியின்  உதிரி பாகங்களை பிரித்து விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. கடந்த 2008ம் ஆண்டு உலாவபாடு அருகே தமிழக லாரி  டிரைவர் ராமசேகர் மற்றும் கிளீனர் பெருமாள் சுப்பிரமணி ஆகியோர் ஒரு கும்பல் கொலை செய்து லாரியில் இருந்த 21.7 டன்  இரும்புகளை குண்டூரில் ஒரு வியாபாரிக்கு விற்பனை செய்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் சையத் அப்துல் சமத் (என்கிற) முன்னா தலைமையிலான கும்பல்  இந்த திருட்டு கொலை வழக்கில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கர்நாடகாவில் உள்ள முன்னாள் எம்எல்ஏவின் பண்ணை வீட்டில்  பதுங்கி இருந்தபோது, முன்னாவை போலீசார் கைது செய்து ஓங்கோலுக்கு அழைத்து வந்தனர். மேலும், முன்னாவின் கூட்டாளிகள் 17  பேரும் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக பிரகாசம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் 18 பேர் குற்றவாளிகள் என ஓங்கோல் நீதிமன்றத்தில்  விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 8வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜி.மனோகர் ரெட்டி முன்னா உள்பட 11  பேருக்கு தூக்கு தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த கும்பல் போலீஸ் உடையில் லாரி டிரைவர், கிளீனர்களை குறிவைத்து கொலை செய்து கொள்ளை அடித்துள்ளனர். இந்த தீர்ப்பினால் 2008ம் ஆண்டு முதல் முன்னா கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டு இறந்தவர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.

Related Stories:

>