×

சென்னை எத்திராஜ் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு

சென்னை:  தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, தேனாம்பேட்டை  டி.டி.கே. சாலையில் உள்ள எத்திராஜ் திருமண மண்டபத்தில், சென்னை மாநகராட்சியின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி  வைத்தார். இந்த தடுப்பூசி சிறப்பு முகாமில் 26 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கோவிட் தடுப்பூசி செலுத்தப்படும் அனைத்து மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சிறப்பு கவனம் செலுத்தி, வரிசையில் காத்திருக்காமல், தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளுடன் அவர்களுக்கு விரைந்து  தடுப்பூசி  செலுத்தப்படும். மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும்.

இத்தடுப்பூசி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள 18004250111  என்ற  உதவி எண் மற்றும் 97007 99993 என்ற காணொலி உதவி எண்களின் வாயிலாக பதிவு செய்யலாம். இந்த உதவி எண்கள் மூலம் பதிவு  செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமின் நாள், நேரம்  மற்றும் இடம் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படும். பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் இருப்பிடத்திற்கு அருகாமையில் தற்காலிக தடுப்பூசி  முகாம்கள்  ஏற்படுத்தப்படும்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் என கண்டறியப்பட்ட நபர்களுக்கு, அவர்களின் வீடு அல்லது மிக அருகில் இருக்கும் இடத்திற்கு சென்று  தடுப்பூசி செலுத்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

மாற்றுத்திறனாளியின் வீட்டிற்கு ஒரு மருத்துவ அலுவலர் தலைமையில் ஒரு செவிலியர் கொண்ட மருத்துவக்குழு சென்று பதிவு விவரங்கள் குறித்து கள ஆய்வு  மேற்கொள்வார்கள். அந்த ஆய்வின் அடிப்படையில் தற்காலிக மருத்துவ முகாம் அவர்களின் வீடுகளுக்கு மிகவும் அருகாமையில் ஏற்படுத்தப்பட்டு உரிய விதிமுறைகளின்படி தடுப்பூசி செலுத்தப்படும். இந்த நிகழ்ச்சியில்,  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  அறநிலையத்  துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் த.வேலு,  கூடுதல் தலைமைச் செயலாளர்  ஹர்மந்தர் சிங்,  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Persons with ,Ethiraj Marriage Hall, Chennai ,Chief Minister ,MK Stalin , Vaccination Special Camp for Persons with Disabilities at Ethiraj Marriage Hall, Chennai: Chief Minister MK Stalin opens
× RELATED விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில்...