×

11 நாட்களாக நடந்த பயங்கர தாக்குதல் இஸ்ரேல்-ஹமாஸ் சண்டை நிறுத்தம்: காசாவில் மக்கள் கொண்டாட்டம்

காசா: சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. 11 நாட்களாக நடந்த இந்த சண்டையில் 240 பேர் பலியாகி உள்ளனர். ஜெருசலேம் அல்-அக்சா மசூதியில் ரம்ஜான் தொழுகைக்கு இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் பல்வேறு கட்டுப்பாடு விதித்தனர். இதனால், பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் ஜெருசலேமில் இருந்து பின்வாங்குமாறு இஸ்ரேலை, காசா போர் முனையில் போராடி வரும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. அதோடு, கடந்த 10ம் தேதி ஜெருசலேம் அருகே இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதிலிருந்து இருதரப்புக்கும் கடுமையான மோதல் வலுத்தது.
காசாவின் குடியிருப்பு பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் குண்டுகளை வீசியதால் பொதுமக்கள், அப்பாவி குழந்தைகள் பலியாகினர். தங்களின் கண்முன் பெற்றோரை பலி கொடுத்த குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

இதனால், இரு தரப்பும் சண்டையை நிறுத்த வேண்டுமென சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்தது. அமெரிக்கா, எகிப்து, கத்தார் மற்றும் ஐநா ஆகியவை இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான சண்டை நிறுத்த பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்தன.  இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி முதல் சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்தது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் சண்டை நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புக் கொண்டதை உறுதி செய்தார். இதனால் காசாவில் அமைதி ஏற்பட்டுள்ளது. அதே சமயம் இது தங்களுக்கு கிடைத்த வெற்றி என இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் கொண்டாடி வருகின்றன.      

இந்த 11 நாள் சண்டையில் காசாவில் 65 குழந்தைகள் உட்பட 232 பாலஸ்தீனர்கள் இறந்துள்ளனர். 1,900 பேர் படுகாயமடைந்துள்ளனர். 1.20 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து இடம் பெயர்ந்துள்ளனர். ஹமாஸ் குழுவைச் சேர்ந்த 150 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதே போல இஸ்ரேலைப் பொறுத்த வரை 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் சவுமியாவும் ஆவார். சண்டை நிறுத்தத்தைத் தொடர்ந்து காசாவில் பொது இடங்களில் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

உலக நாடுகள் வரவேற்பு
சண்டை நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் பைடன் கூறுகையில், ‘‘இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் இருதரப்பிலும் தங்களின் அன்பிற்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காசாவில் மறுகட்டமைப்புகளுக்கான நடவடிக்கை மற்றும் மனிதநேய உதவிகள் ஆகிய நடவடிக்கைகளில் ஐநாவிற்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது’’ என்றார். இதே போல ஐநா தலைவர் கட்டரஸ், ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி உள்ளிட்டோரும் வரவேற்றுள்ளனர்.

Tags : Hamas ,Gaza , 11-day Israeli-Hamas ceasefire: People's celebration in Gaza
× RELATED காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர...